ஆசியான்-கொரியா தடையற்ற வணிக ஒப்பந்தம்-இறுதி செய்யப்பட்டு வருகிறது!
- Muthu Kumar
- 25 Sep, 2025
கோலாலம்பூர், செப். 25-
அக்டோபரில் நடைபெறவிருக்கும் ஆசியான் தலைவர்கள் உச்சநிலை மாநாட்டில் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு வழிவகுக்கும் வகையில் மேம்படுத்தப்பட்ட ஆசியான்-கொரியா தடையற்ற வணிக ஒப்பந்தத்தின் நோக்கத்தை ஆசியானும் தென் கொரியாவும் இறுதி செய்து வருவதாக முதலீடு, வாணிப, தொழில்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு ஸஃப்ருல் தெங்கு அப்துல் அசிஸ் தெரிவித்தார்.
"எனவே தற்போது நாம் மேம்படுத்தக்கூடிய பகுதிகள் என்னவென்று விவாதித்து வருகிறோம். எனவே, அது இறுதி செய்யப்பட்டு வருகிறது. மேலும் தலைவர்களின் உச்சநிலை மாநாட்டின் போது அதை அறிவிக்க விரும்புகிறோம். இப்போது, இறுதி செய்ய வேண்டிய நேரம் இது. அக்டோபர் மாதம் நடைபெறும் தலைவர்களின் உச்சநிலை மாநாட்டின்போது அதை அறிவிப்போம்" என்றார் அவர்.
நேற்று, கோலாலம்பூரில் மூன்றாவது நாளாக நடைபெற்றுவரும் 2025-ஆம் ஆண்டுக்கான ஆசியான் பொருளாதார அமைச்சர்கள் கூட்டத்தை முன்னிட்டு 22ஆவது ஆசியான்-கொரியக் குடியரசு கலந்துரையாடலுக்குப் பின்னர், செய்தியாளர்களிடம் தெங்கு ஸஃப்ருல் அவ்வாறு கூறினார்.
தடையற்ற வாணிக ஒப்பந்தத்தைத் தவிர, அந்த கலந்துரையாடலில் பொருளாதார ஒத்துழைப்பு, விநியோகச் சங்கிலி மேம்பாடுகள், மின்னியல் உபரிப்பாகம், இலக்கவியல் தொழில்நுட்பம், அரிய பூமி தாதுக்கள், பசுமை மாற்றம், புவிசார் அரசியல் பிரச்சினைகள் போன்ற விவகாரங்களும் விவாதிக்கப்பட்டன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



