டிபிகேஎல் கீழ் உள்ள 10,000 வியாபாரிகளுக்கு 50 விழுக்காடு வாடகை குறைப்பு – ஹன்னா இயோ

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, ஏப். 12-

கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் (DBKL) நிர்வாகத்தின் கீழ் செயல்படும் 10 ஆயிரம் வியாபாரிகளுக்கு இரண்டு ஆண்டுகள் காலத்திற்கு 50 விழுக்காடு வாடகை குறைப்பு வழங்கப்படுவதாக பிரதமர் துறை அமைச்சர் (கூட்டரசு பிரதேசம்) Hannah Yeoh அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு மற்றும் எரிபொருள் விலை உயர்வால் பாதிக்கப்பட்ட சிறு வியாபாரிகளின் சுமையை குறைப்பதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தார்.

மேலும், இந்த நிவாரண திட்டத்தை முதன்முதலில் அறிவித்த உள்ளூராட்சி அமைப்புகளில் கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் மற்றும் லாபுவான் கழகம் ஆகியவை இடம்பெறுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

“டிபிகேஎல் கீழ் பதிவு செய்யப்பட்ட 10 ஆயிரம் பேரின் நீண்ட பட்டியல் எங்களிடம் உள்ளது. இதில் அனைத்து வணிகத் தளங்களும் அடங்கும். குறிப்பாக உணவக வளாகங்கள், சிற்றுண்டி மையங்கள் மற்றும் சந்தை விற்பனை இடங்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன,” என அவர் கூறினார்.

இன்று நடைபெற்ற புத்ராஜெயா ஆக்டிப் நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்த பின்னர் ஊடகங்களுக்குப் பேசிய அவர், இந்த வாடகை குறைப்பு திட்டம் டிபிகேஎல் கட்டுப்பாட்டில் உள்ள சிறு வியாபாரிகள் மற்றும் குறிப்பிட்ட வர்த்தக வளாகங்களுக்கு பொருந்தும் என தெரிவித்தார்.

இந்த சலுகை கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதுடன், 2027ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை தொடரும் என்றும் அவர் கூறினார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *