கோவையில் 13 வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளை - 3 வடமாநில கொள்ளையர்கள் சுட்டுப்பிடிப்பு!

top-news
FREE WEBSITE AD

கோவை மாநகர் கவுண்டம்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் அடுத்தடுத்து 13 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் காவல் துறையினர் மூன்று பேரை சுட்டுப் பிடித்திருந்தனர்.

இந்நிலையில், சுட்டுப் பிடிக்கப்பட்வர்களில் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். இச்சம்பவத்தில் கொள்ளையர்களை அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டு போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் 1,848 வீடுகள் உள்ளன. இந்தக் குடியிருப்பில் ஏ பிளாக்கில் 3 வீடுகள், சி பிளாக்கில் 10 வீடுகள் என 13 வீடுகளில் கடந்த வெள்ளிக்கிழமை பட்டப்பகலில் அடுத்தடுத்து கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. இந்தகொள்ளை சம்பவத்தில் 42 சவரன் நகை மற்றும் 1.5 இலட்சம் ரூபாய் பணம், 500 கிராம் வெள்ளிப் பொருள்கள் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டன.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த கவுண்டம்பாளையம் போலீஸார் அப்பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் மூன்று பேர் கொண்ட மர்ம நபர்கள் ஆட்டோ மூலம் வந்து கொள்ளை அடித்து விட்டு அதே ஆட்டோவில் திரும்பச் சென்றது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, தனிப்படை அமைத்த்து போலீஸார் குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், நேற்று முன்தினம் குனியமுத்தூர் அடுத்த குளத்துப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருந்த உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆசிஃப் 48, இர்ஃபான் 45, கல்லூ ஆரிஃப் 60 ஆகிய மூன்று பேரை காவல் துறையினர் பிடிக்க முயன்றனர்.

அப்போது, காவல் துறையினரை தாக்கிவிட்டு அம்மூவரும் தப்ப முயன்றதையடுத்து அவர்களை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். இதில், காயமடைந்த 3 பேரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் பலத்த காயத்துடன் அனுமதிக்கப்பட்டிருந்த ஆசிஃப் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். அவரது வலது காலில் துப்பாக்கி சுடப்பட்டதில் அதிக அளவிலான ரத்தம் வெளியேறி அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட மூவருடன் ஒரே வீட்டில் வசித்து வந்த மேலும் 12 பேரை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சிசிடிவி கேமரா காட்சிகள் அடிப்படையில் ஆட்டோ வாகனத்தின் பதிவினை வைத்து ஆட்டோ ஓட்டி வந்த கோவை குனியமுத்தூர், சுகுணாபுரத்தை அடுத்த மைல்கல் பகுதியைச் சேர்ந்த அயூப்கான் என்ற ஆட்டோ ஓட்டுநரையும் பிடித்து விசாரித்தனர்.

அப்போது, கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் உட்பட அவருடன் வசித்து வந்த நபர்களுக்கு அவ்வப்போது அவர் ஆட்டோ ஒட்டி வந்ததும், பல்வேறு சமயங்களில் பல இடங்களுக்கும் அவரது ஆட்டோவையே கொள்ளையர்கள் பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அயூப்கானை கைது செய்த போலீசார் நீதிமன்ற உத்தரவின்பேரில் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *