மகாதீரின் பேத்தி வீட்டில் வெ. 18 லட்சம் கொள்ளை-மூவரிடம் போலீஸ் விசாரணை!
- Muthu Kumar
- 28 Jul, 2025
கோலாலம்பூர், ஜூலை 28-
புக்கிட் லேடாங்கில் துன் டாக்டர் மகாதீர் முகமதுவின் பேத்தியின் வீட்டில் நிகழ்ந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் மூவரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால், இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. சந்தேகப் பேர்வழிகளை அடையாளம் காண்பற்கான புலன்விசாரணை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கோலாலம்பூர் இடைக்கால போலீஸ் தலைவர் டத்தோ முகமது யூசுப் ஜான் முகமது தெரிவித்தார்.
அந்த வீட்டில் சிசிடிவி (மறைகாணிகள்) பொருத்தப்பட்டிருப்பது புலன்விசாரணையிலிருந்து தெரிய வந்துள்ளது. ஆனால், அதிலிருந்து எந்த தரவுகளையும் எங்களால் பெறமுடியவில்லை. அந்த மறைகாணிகளுக்கு இருபத்து நான்கு மணிநேரத்திற்கு மட்டுமே தரவுகளை சேமித்து வைத்துக் கொள்ளும் ஆற்றல் உள்ளது என்று அவர் விளக்கினார்.
ஆளில்லாத நேரத்தில் மகாதீருடைய பேத்தியின் வீட்டுக்குள் புகுந்த திருடர்கள் பதினெட்டு லட்சம் வெள்ளி மதிப்புடைய பொருட்களைக் களவாடிச் சென்றனர். அதனை முதலில் கண்டவர் வீட்டின் பணிப்பெண் ஆவார்.வீட்டின் பின்வாசல் பூட்டைத் துண்டித்துவிட்டு அவர்கள் உள்ளே சென்று களவாடியிருப்பதை அப்பணிப்பெண் கண்டுபிடித்துள்ளார்.அந்த வீடு டாக்டர் மகாதீரின் மகன் மிர்ஸானுக்குச் சொந்தமானதாகும். அதில் மிர்ஸானின் மகள் வசித்து வருகிறார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



