பேரணி நடைபெற்ற இடத்தில் 20 டன் குப்பைக் கூளங்களா?மக்களவையில் அமளி!
- Muthu Kumar
- 29 Jul, 2025
கோலாலம்பூர், ஜூலை 29-
கடந்த சனிக்கிழமை அன்வார் எதிர்ப்புப் பேரணி நடைபெற்ற இடத்திலிருந்து இருபது டன் எடைகொண்ட குப்பைக் கூளங்கள் அகற்றப்பட்டது என்று வீடமைப்பு மற்றும் ஊராட்சித்துறை அமைச்சர் ஙா கோர் மிங் கூறியதைத் தொடர்ந்து மக்களவையில் நேற்று சிறிதுநேரத்திற்கு அமளி ஏற்பட்டது.
ஙா கோர் மிங்கின் இக்கூற்றைத் தொடர்ந்து அதனை நிரூபிக்கும்படி பெரிக்காத்தான் நேஷனலின் பெண்டாங் நாடாளுமன்ற உறுப்பினர் அவாங் ஹஷிம் சவால் விடுத்தார்.பேரணிக்கு வந்தவர்களுள் பெரும்பாலானோர் பிளாஸ்டிக் நீர்ப் புட்டிகளைத்தான் கொண்டு வந்தனர். எனவே, இருபது டன் குப்பைகள் அங்கு கைவிடப்பட்டதாக அவர் கூறியிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவாங் கூறினார்.
அங்கிருந்து இருபது டன் குப்பைகள் அகற்றப்பட்டன என்பதை அமைச்சர் நிரூபிக்க வேண்டும். அதனை நிரூபித்தால்தான் நீங்கள் பொய்யுரைக்கவில்லை என்பதை ஒப்புக்கொள்வேன் என்று அவாங் வலியுறுத்தினார்.
அதற்குப் பதிலளித்த ஙா கோர் மிங், அரசாங்கத்தின் திடக்கழிவு மேலாண்மை மற்றும் பொதுத் துப்புரவுக் கழகம் வழங்கிய புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டுதான் அதனைத் தாம் தெரிவித்ததாக விளக்கினார்.அமைதிப் பேரணிகள் நடத்துவதில் அரசாங்கத்திற்கு ஆட்சேபம் இல்லை. ஆனால், குப்பைகளை ஆங்காங்கே போட்டுச் செல்வதைத்தான் நாங்கள் கண்டிக்கிறோம் என்றார்.
குப்பைகளை வீசிச் செல்பவர்களை மட்டும்தான் குறைகூறுகிறேன், பெண்டாங் உறுப்பினரை நான் குறைகூறவில்லை. பாஸ் கட்சியின் அமால் பிரிவு குப்பைகளை அகற்ற உதவி செய்தது என்பதை நான் மறுக்கவில்லை. சோகோ மற்றும் மெர்டேக்கா சதுக்கம் ஆகிய இடங்களில் இருபது டன் எடைகொண்ட குப்பைகள் போடப்பட்டிருந்தன என்பதை வலியுறுத்த விரும்புகிறேன் என்று ஙர் கோர் மிங் குறிப்பிட்டார்.
அவ்வேளையில், பெரிக்காத்தான் நேஷனலின் உலு திரெங்கானு நாடாளுமன்ற உறுப்பினர் ரோசோல் வாஹிட் அதே கூட்டணியைச் சேர்ந்த பாகான் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் இட்ரிஸ் அமாட் மற்றும் இதர பல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஙா கோர் மிங்கின் குறைகூறலுக்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



