தஞ்சோங் லங்சாட் பெட்ரோகெமிக்கல் தொழிற்சாலையில் சோதனை; 225 பேர் கைது!
- Muthu Kumar
- 25 Jul, 2025
(கோகி கருணாநிதி)
பாசீர் கூடாங், ஜூலை 25-
ஜொகூரின் மிகப்பெரிய பெட்ரோகெமிக்கல் தொழிற்சாலையின் செயற்பாட்டு, கட்டுமான இடத்தில் தஞ்சோங் லங்சாடில் நடைபெற்ற திடீர் சோதனையின் போது, மொத்தம் 225 வெளிநாட்டு தொழிலாளர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
இவ்விசாரணையை உறுதி செய்த ஜொகூர் குடிவரவு துறை இயக்குநர் டத்தோ முகமட் ருஸ்டி முகமட் தரூஸ் தெரிவித்ததாவது, ஜூ லை 22ஆம் தேதி காலை 11 மணியளவில் "ஒப்ஸ் மகிர்" எனும் குறியீட்டுப் பெயரில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இது பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில், சரியான வேலை அனுமதிகள் இல்லாமல் வெளிநாட்டவர்கள் அங்கு பணியாற்றுவதாக வந்த புகாருக்கு பிறகு, புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் நடத்தப்பட்டது எனவும் அவர் கூறினார்.
சுமார் இரண்டு,மூன்று மாதங்களுக்கு முன்பே அவர்கள் அங்கு பணிபுரிந்து வந்துள்ளனர் என நம்பப்படுகிறது. சோதனையின் போது மொத்தம் 664 பேர் உள்ளூர், வெளிநாட்டவர்கள் பரிசோதிக்கப்பட்டனர். இதில் 225 பேர், வயது 21 முதல் 63 வரையிலானவர்கள், விதிமீறல்களுக்காக கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 129 பேர் சீனாவைச் சேர்ந்த ஆண்கள், நான்கு சீனப் பெண்கள், 84 வங்காளதேச ஆண்கள், இரண்டு இந்தோனேசிய ஆண்கள், இரண்டு பாகிஸ்தான் ஆண்கள், இரண்டு நேபாள ஆண்கள் ஆகியோர் அடங்குவர்.
ஒரு மலேசிய ஆடவர், ஒரு மலேசியப் பெண் ஆகியோர் அந்தத் தளத்தில் மேலாளர், மனிதவள அதிகாரியாக பணியாற்றிக் கொண்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.தற்போது பெக்கான் நானாஸ் குடிவரவுத் துறையின் தடுப்புக் காவல் மையத்தில் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



