வெ.28 லட்சம் ஊழல் வழக்கில் தற்காப்பு வாதம் புரியும்படி-புங், ஸீஸிக்கு உத்தரவு!

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, நவ. 19-

பெல்கிரா பெர்ஹாட் முதலீட்டு விவகாரத்தில் 28 லட்சம் வெள்ளி லஞ்சஊழல் புரிந்ததாக தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள மூன்று குற்றங்களை எதிர்த்து தற்காப்பு வாதம் புரியும்படி கினாபாத்தாங்கான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ புங் மொக்தார் ராடினுக்கும் அவரின் மனைவி டத்தின்ஸ்ரீ ஸீஸி இஸெட் அப்துல் சமாட்டுக்கும் மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

இதற்கு முன்னர் அவர்கள் இருவரையும் விடுவிக்க உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு காலம் கனிவதற்கு முன்பே எடுக்கப்பட்ட ஒரு முடிவாகும் என்றும் வழக்கு விசாரணைக்கு இது இடையூறு ஏற்படுத்தியது என்றும் நீதிபதி அமாட் ஸைடி இப்ராஹிம் தலைமையிலான மூவரடங்கிய அமர்வு தெரிவித்தது.

அந்த அமர்வில் முகமது ஸைனி மஸ்லான், நூரின் படாருடின் ஆகிய நீதிபதிகளும் இடம்பெற்றிருந்தனர்.தற்காப்பு வாதம் செய்யும்படி உத்தரவிடப்படும் நபர்கள் அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது என்பது நடைமுறைச் சட்டமாகும் என்று முகமது ஸைனி குறிப்பிட்டார்.குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர வேண்டும். அவர்கள் தங்களின் தற்காப்புவாதத்தைச் சமர்ப்பிக்க அனுமதிக்க வேண்டும் என்று நீதிபதி கூறினார்.

தங்களுக்கு எதிரான லஞ்சஊழல் வழக்கில் தற்காப்பு வாதம் புரியும்படி புங் மொக்தாருக்கும் அவரின் மனைவிக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவைத் தள்ளுபடி செய்யக்கோரி அந்த தம்பதி செய்த சீராய்வு மனுவை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம் அவர்களை கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி விடுதலை செய்தது.அவர்கள் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதியன்று அரசுத் தரப்பினர் மேல்முறையீடு செய்தனர்.

பப்ளிக் மியூச்சுவல் முதலீட்டு நிதியில் பதினைந்து கோடி வெள்ளியை முதலீடு செய்ய பெல்கிராவின் அனுமதியைப் பெறுவதற்காக முதல் கட்டமாக இருபத்திரண்டு லட்சம் வெள்ளியையும் இரண்டாம் கட்டமாக இரண்டு லட்சத்து அறுபத்திரண்டாயிரத்து ஐந்நூறு வெள்ளியையும் லஞ்சமாகப் பெற்றதாக கடந்த 2019ஆம் ஆண்டு மே மாதம் 3ஆம் தேதியன்று புங் மொக்தார் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

அப்போது புங் மொக்தார் பெல்கிரா நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராக இருந்தார். கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் தேதியன்று பிற்பகல் 12.30மணிக்கும் மாலை 5மணிக்கும் இடையில் பப்ளிக் பேங்கின் தாமான் மெலாவாத்தி கிளையில் அக்குற்றம் புரியப்பட்டது. பப்ளிக் மியூச்சுவல் பெர்ஹாட்டின் முகவர் மாஹ்டி அப்துல் ஹமீட் கொடுத்த அப்பணத்தை ஸீஸியின் வாயிலாக புங் மொக்தார் பெற்றுள்ளார்.அந்த விவகாரத்தில் தம்முடைய கணவருக்கு உடந்தையாக இருந்ததாக ஸீஸி மீது மூன்று குற்றங்கள் சுமத்தப்பட்டன.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *