சட்ட விரோத வட்டி முதலாளிகளிடமிருந்து 2,924 ATM கார்டுகள் பறிமுதல்

top-news
FREE WEBSITE AD

(இரா. கோபி)

 சிலாங்கூர், ஆக 18: சிலாங்கூர், சுபாங் ஜெயாவைச் சுற்றியுள்ள பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொண்டதன் விளைவாக கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி, புக்கிட் அமான் ஜேஎஸ்ஜேகே புலனாய்வு/செயல்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் குழு சந்தேகத்திற்கிடமான 3 உள்ளூர் ஆடவர்களைக் கைது செய்ததாக புக்கிட் அமான் வணிக குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ ருஸ்டி முகமட் இஸா கூறினார் .

ஆய்வின் விளைவாக, அனைத்து நபர்களும் உரிமம் பெறாத பணக் கடன் வழங்கும் சிண்டிகேட்டிற்கு 'ஏடிஎம் கார்டு சேகரிப்பாளர்களாக' பணிபுரிந்து வருவது கண்டறியப்பட்டது. சிண்டிகேட்டால் வழங்கப்பட்ட ஏடிஎம் கார்டுகளிலிருந்து கடன் தொகையை எடுக்கவும் அவர்கள் பணியாற்றி வந்துள்ளனர்.

அவர்கள் பணிபுரியும் இடத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், அது அவர்களின் வசிப்பிடமாகவும் இருந்தது எனக் கண்டறியட்டது. அங்கு, அதே செயலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் மேலும் இரண்டு உள்ளூர் ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மொத்தம் 23 முதல் 36 வயதுக்குட்பட்ட 5 உள்ளூர் ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட நபர்களில் ஒருவர் 1953 ஆம் ஆண்டு திறந்த சூதாட்ட வீடுகள் சட்டத்தின் பிரிவு 4A(a) இன் கீழ் குற்றப் பின்னணி கொண்டவர் என்பது ஒரு சோதனையில் கண்டறியப்பட்டது.

சோதனையின் பல்வேறு வங்கிகளைச் சேர்ந்த  2,924 ஏடிஎம் கார்டுகள் உட்பட ரிம.119,977.00 ரொக்கம், 14 கைத்தொலைப்பேசிகள், 1 ரூட்டர் செட், 3 வாகனங்கள், 6 ரப்பர் ஸ்டாம்புகள், கடன் ஒப்பந்த ஆவணங்கள் கொண்ட 1 பை, பல்வேறு கடன் ஒப்பந்த ஆவணங்கள், தனிப்பட்ட விவரங்கள் கொண்ட 1 லக்கேஜ் பை, ஏடிஎம் கார்டுகள் கொண்ட 3 உறைகள், 14 வணிக அட்டைகள், 2 டேப்லெட்டுகள், 3 மடிக்கணினிகள், 2 கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட நபர்கள் டெலிகிராம்  மூலம் தங்கள் மேற்பார்வையாளர்களிடமிருந்து பணம் எடுக்க அறிவுறுத்தல்களைப் பெற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒரு நாளைக்கு சுமார் 2 முறை பணம் எடுக்கப்பட்டு,  ஒரு நாளைக்கு RM5,000 முதல் RM8,000 வரை தொகையாக எடுக்கப்பட்டு, பின்னர்  அந்தப் பணம் பேக் செய்யப்பட்டு லாலாமூவ் சேவை வழியாக   ஒரு குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பப்பட்டு வந்துள்ளது.

ஐந்து பேருக்கும் மாதத்திற்கு RM2,500 முதல் RM3,500 வரை பணம் வழங்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்,

கைது செய்யப்பட்ட அனைவரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி, அவர்களின் தடுப்புக்காவல் காலாவதியான பிறகு போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். விசாரணைகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன.

கடன், வாடகைக்கு கணக்குகளை வழங்குதல் அல்லது வேறொருவரின் ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி பணம் எடுக்க கும்பலுக்கு உதவுதல் என எதுவாக இருந்தாலும், சட்ட விரோத வட்டி முதலாளிகளுடன் ஈடுபடுவது குற்றமாகும்.

சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் பிரிவு 424A, சட்டப்பூர்வ அதிகாரம் அல்லது நோக்கம் இல்லாமல், மற்றொரு நபருக்குச் சொந்தமான எந்தவொரு கட்டண ஆவணத்தையும் வைத்திருந்தால், அவர்களுக்கு  RM5,000க்குக் குறையாத RM50,000 க்கு மிகாமல் அபராதம் அல்லது ஆறு மாதங்களுக்குக் குறையாத, ஐந்து ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

பிரிவு 424B தனது கட்டண ஆவணம் அல்லது வங்கிக் கணக்கை வேறொரு நபருக்கு வைத்திருத்தல் அல்லது கட்டுப்படுத்துதல், RM10,000 க்கு குறையாத, RM100,000 க்கு மிகாமல் அபராதம் அல்லது ஒரு வருடத்திற்குக் குறையாத, ஏழு ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

பிரிவு 424C(1), சட்டப்பூர்வ நோக்கம் இல்லாமல் தனது கட்டண ஆவணம் அல்லது வங்கிக் கணக்கைப் பயன்படுத்தி எந்தவொரு பரிவர்த்தனையிலும் ஈடுபடுதல், மூன்று வருடங்களுக்குக் குறையாத, பத்து வருடங்களுக்கு மிகாத சிறைத்தண்டனை அல்லது RM10,000 க்கு குறையாத, RM150,000 க்கு மிகாத அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

பிரிவு 424C(2): சட்டப்பூர்வமான நோக்கமின்றி மற்றொரு நபருக்குச் சொந்தமான கட்டணக் கருவி அல்லது வங்கிக் கணக்கைப் பயன்படுத்தி எந்தவொரு பரிவர்த்தனையிலும் ஈடுபடுதல், மூன்று வருடங்களுக்குக் குறையாத, பத்து வருடங்களுக்கு மிகாத சிறைத்தண்டனை அல்லது RM10,000 க்கு குறையாத, RM150,000 க்கு மிகாத அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

மற்றவற்றுடன், எந்தவொரு பணக் கடன் வழங்குநரும் கடன் வாங்குபவரின் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஏடிஎம் கார்டு அல்லது எந்தவொரு தனிப்பட்ட ஆவணத்தையும் வைத்திருக்க அனுமதிக்கப்படவில்லை என்பதையும் பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டும். அத்தகைய செயல் ஒழுங்குமுறை 15A(1), பணக் கடன் வழங்குபவர்கள் (கட்டுப்பாடு மற்றும் உரிமம் வழங்குதல்) விதிமுறைகள் 2024 இன் கீழ் குற்றமாகும்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *