பினாங்கில் 2 புதிய மின்சக்தி நிரப்புக் கூடங்கள்! மின்னுந்து வைத்திருப்போர் பயன்பெற நடவடிக்கை!
- Muthu Kumar
- 20 Sep, 2025
(ஆர்.ரமணி)
பினாங்கு, செப்.20-
தற்காலத்தில் மக்களிடையே மின்னுந்து பயன்பாடு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, அத்தகைய வாகனங்களை வைத்திருப்போர் பயன்பெறுவதற்கு வகை செய்யும் அக்கறை உணர்வுடன் நாடெங்கிலும் 10 ஆயிரம் மின்சக்தி நிரப்புக் கூடங்களை அமைக்கும் உத்தேசத் திட்டத்தை மலேசிய அரசு செயல்படுத்தி வரும் நிலையில், பினாங்கு மாநிலத்திலும் அவ்வாறான கூடங்களை நிர்மாணிப்பதில் மாநில மாநகர் மன்றம் முனைப்பு காட்டியிருக்கிறது.
அவ்வண்ணம் இங்கிருக்கும் மாநகர வீதிகளில் அத்தகைய கூடங்களை அமைக்கும் திட்டம் கட்டம் கட்டமாக நிறைவேற்றப்பட்டு வரும் பட்சத்தில், நேற்று முன்தினம் இங்கிருக்கும் பெர்சியாரான் கர்ப்பால் சிங் நெடுஞ்சாலையில், மேலும் 2 புதிய மின்சக்தி நிரப்புக் கூடங்களை அமைப்பதற்கான திட்டம் தொடர்பில், மாநில உள்ளாட்சி மற்றும் நகரப் பெருந்திட்டத் துறையின் ஆட்சிக் குழு உறுப்பினர் ஹிங் மூய் லாய் செய்தியாளர்களுடனான சந்திப்புக் கூட்டத்தில் தெளிவுபடுத்தினார்.
முன்னதாக வகுக்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் மாநில ரீதியாக 600 கூடங்களை அமைப்பதென்று முடிவு காணப்பட்டு, மாநகர் மன்றத்தின் நிர்வாகப் பகுதிகளில் 300 கூடங்களை நிர்மாணிப்பதற்கான உடன்பாடு கண்டு அவற்றுக்கான பணிகள் நடைபெற்று வருவதாக அவர் விவரித்தார். இந்த அடிப்படையில் மக்கள் நடமாட்டம் மிகுந்திருக்கும் கர்ப்பால் சிங் நெடுஞ்சாலையின் வாகன தரிப்பிடப் பகுதியில் 2 புதிய கூடங்களை அமைப்பதற்கு முடிவெடுக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்தகு மின்னேற்றக் கூடங்கள் இருவகை அம்சங்களில் அதாவது, DC மின்சக்தி 60KW, AC மின்சக்தி 22KW என்ற அளவுகளில் நிர்மாணிக்கப்பட்டு வரும் நிலையில் முதற் கட்டமாக மாநிலத்தின் 26 பகுதிகளில் உள்ளடக்கி 52 கூடங்கள் அமைக்கப்பட்டு, அவற்றில் DC மின்சக்தி முறையில் 50 கூடங்களும் AC மின்சக்தி முறையில் 2 கூடங்களும் நிறுவப்பட்டிருப்பதாக அவர் விளக்கமளித்தார்.
இதுவரையில் முழுமையடைந்திருக்கும் 48 கூடங்கள் பயன்பாட்டிற்கு தயாராகி விட்டிருக்கும் பட்சத்தில் ஏனைய 4 கூடங்களுக்கான மின்சார வாரியத்தின் ஒப்புதல் பரிசீலனையில் உள்ளதாகவும் அமைச்சர் கூறியதுடன் இதற்கான கட்டணத்தை மாநகர் மன்றத்தின் செயலி வாயிலாக நிர்ணயிக்கப்பட்டிருக்கும் அளவீட்டு முறையில் பொதுமக்கள் செலுத்துவதற்கு வசதி ஏற்படுத்தப்பட்டு நடைமுறையில் இருப்பதாகவும் விவரித்தார்.
இதனிடையே மின்னுந்துகளுக்கான மின்சக்தி நிரப்புக் கூடங்களை நிர்மாணிக்கும் பணியில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பும் உள்ளடங்கியிருப்பதாகக் கூறிய அவர், அவர்களது சார்பில் 264 கூடங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில், பயன்பாட்டுக்கான மொத்தக் கூடங்கள் இதுவரை 322 என்ற எண்ணிக்கையில் உள்ளதாகவும், எதிர்வரும் டிசம்பர் திங்களுக்குள் இந்த எண்ணிக்கை 422 ஆக அதிகரித்து விடுமென்றும் அவர் எடுத்துரைத்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



