சிலாங்கூரில் 3000 இன்புளூயன்ஸா நோய்த்தொற்று ; ஆனால் இறப்பு இல்லை
- Tamil Malar (Reporter)
- 18 Nov, 2025
செய்தி- வெற்றி மைந்தன்
ஷா ஆலம், நவ. 18-
சிலாங்கூர் மாநிலத்தில், கடந்த வருடம் ஜனவரி முதல் 2025 அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் 3000 இன்புளூயன்ஸா (காய்ச்சல் வைரஸ்) தொற்று உறுதிபடுத்தப்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்றாலும் ஒரு இறப்பு கூட உறுதிப்படுத்தப்படவில்லை என்று மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மாநில பொது சுகாதார, சுற்றுச்சூழல் ஆட்சிக் குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் இன்று வெளியிட்ட அறிக்கையில், சில இறப்புகள் இன்புளூயன்ஸா தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்டு அறிக்கையிடப்பட்டிருந்தாலும், மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு அவை இன்புளூயன்ஸாவால் ஏற்பட்டவை அல்ல என உறுதியாகியுள்ளது என்றார்.
இருப்பினும், மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளதாகவும், ஆனால் அவை பெரும்பாலும் பருவகால தொற்றுகளே என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறவும், முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி சுத்தம் செய்வது போன்ற தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றவும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



