சிறப்பு முகப்பிட விசாரணை தொடர்பில் ரிம.16 லட்சம் மதிப்புள்ள 3.2 கிலோ தங்க ஆபரணங்கள் சிக்கின!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப். 15-

சிறப்பு முகப்பிட கும்பலுடன் தொடர்புடைய ஆறு சந்தேகப்பேர்வழிகளை கைது செய்துள்ள மலேசிய லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணையம் (எம்ஏசிசி), அவர்களிடமிருந்து 16 லட்சம் வெள்ளி மதிப்புடைய 3.2கிலோ தங்க ஆபரணங்களை பறிமுதல் செய்துள்ளது. கைதாகியுள்ள அந்த அறுவரில் ஐவர் குடிநுழைவு இலாகா அதிகாரிகளாவர்.

நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைய அந்நிய நாட்டவர்களை அனுமதித்ததற்கு கைமாறாக அவர்கள் லஞ்சம் பெற்றதாக, எம்ஏசிசி துணைத் தலைமை ஆணையர் (நடவடிக்கை பிரிவு) அஹ்மாட் குசாய்ரி யஹ்யா தெரிவித்துள்ளார்.லஞ்சப் பணம் மூலம் வாங்கப்பட்டதாக நம்பப்படும் சொத்துகளை இலக்காகக் கொண்டு, இம்மாதம் 9 முதல் 11ஆம் தேதி வரையில் சிலாங்கூர் மாநில எம்ஏசிசியினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின்போது, மேற்கூறப்பட்ட தங்க ஆபரணங்கள் அனைத்தும் கைப்பற்றப்பட்டதாக, நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அவர் தெரிவித்தார்.

இவற்றை தவிர்த்து நிலம், ஒரு வீடு, பல சொகுசு கார்கள், சுமார் 4 லட்சம் வெள்ளி மதிப்புள்ள 75 தங்கக் கட்டிகள், அதிக விலையுள்ள கைப்பைகள், ஒரு லட்சம் வெள்ளி மதிப்புள்ள விலையுயர்ந்த 20 கைக்கடிகாரங்கள் மற்றும் 20 ஆயிரம் வெள்ளி ரொக்கம் ஆகியவையும் அந்நடவடிக்கைகளில் கைப்பற்றப்பட்டன.

அதோடு, 70 வங்கிக் கணக்குகளையும் எம்ஏசிசி முடக்கி இருக்கின்றது. அக்கணக்குகளில் சுமார் 33 லட்சம் வெள்ளி வைக்கப்பட்டுள்ளது. சிறப்பு முகப்பிட வாசல் வழியாக நாட்டிற்குள் அந்நிய நாட்டவர்களை நுழைய அனுமதித்ததற்கு கைமாறாக முகவர்களிடமிருந்து அந்த குடிநுழைவு அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக நம்பப்படுகிறது என்று குசாய்ரி கூறினார்.

முறையாக பரிசோதனைகள் செய்யப்படாமல் குடிநுழைவு பரிசோதனை என்ற பெயரில் கண் துடைப்பு அடிப்படையில், இந்த முகப்பிடங்கள் வழியாக, முன்கூட்டியே தேர்வு செய்யப்பட்ட அந்நியர்களை நாட்டிற்குள் அனுமதிக்க இந்த சிறப்பு முகப்பிடங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன.இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ள கும்பல்களுடன் தொடர்பு கொண்ட சந்தேகத்தின் பேரில் கடந்த வாரத்தில் மட்டும் கோலாலம்பூர், சிலாங்கூர், மலாக்கா மற்றும் நெகிரி செம்பிலானில் கைதாகி இருப்போரில் 19 குடிநுழைவு அதிகாரிகளும் அடங்குவர்.

நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைய வெளிநாட்டவர்களை அனுமதிப்பதற்கு கைமாறாக இந்த சிறப்பு முகப்பிட கும்பலிடமிருந்து குடிநுழைவு அதிகாரிகள் லஞ்சமாக மாதம் ஒன்றுக்கு 50 ஆயிரம் வெள்ளி வரையில் பெற்றிருப்பதாக, எம்ஏசிசி தலைவர் அஸாம் பாக்கி நேற்றுமுன்தினம் சனிக்கிழமை தெரிவித்திருந்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *