பண்டார் ஸ்பிரிங்ஹில் தமிழ்ப்பள்ளியில் திறந்தவெளி மண்டபம்-அந்தோணி லோக் முயற்சியில் ரிம. 4 லட்சத்து 50ஆயிரம் நிதி உதவி!
- Muthu Kumar
- 04 Sep, 2025
(நாகேந்திரன் வேலாயுதம்)
லுக்குட், செப்.4-
பண்டார் ஸ்பிரிங்ஹில் தமிழ்ப்பள்ளியின் திறந்தவெளி மண்டபம் கட்டுமானத் திட்டத்திற்கு போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் முயற்சியால் ஒய்டிஎல் நிறுவனத்திடமிருந்து 4லட்சத்து50ஆயிரம் ரிங்கிட் பெறப்பட்டுள்ளது.
நேற்று காலை அப்பள்ளிக்கு வருகை தந்த நெகிரி செம்பிலான் மாநில வீடமைப்பு ஊராட்சி மற்றும் போக்குவரத்து அரசு ஆட்சிக்குழு உறுப்பினர் அருள்குமார் ஜம்புநாதன் அத்தகவலை கூறினார்.
முன்னதாக அதற்கான காசோலையை அப்பள்ளி மேலாளர் வாரியத் தரப்பிடம் ஒப்படைத்த அவர், இப்பள்ளியில் தற்போது மொத்தம் 385 மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள், அவர்களின் பள்ளி புறப்பாட நடவடிக்கைகள், எந்தவொரு தடையுமின்றி நடைபெற, இந்த திறந்தவெளி மண்டபம் வசதியான சூழலை ஏற்படுத்தி தரும் என அருள்குமார் நம்பிக்கை தெரிவித்தார்.
இதற்கான நிதி கேட்டு அப்பள்ளி நிர்வாகம், பள்ளி மேலாளர் வாரியம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கம் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதற்கான தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது என்றார்.இந்த நிதியின் மூலமாக இத்திட்டத்திற்கான முழு நிதியும் கிடைக்கப்பெற்றுள்ள வேளையில், அதற்கான அனுமதி பெறப்பட்ட பிறகு, ஓராண்டுக்குள் இதன் கட்டுமானத் திட்டம் தொடங்கப்படும் என அருள்குமார் தெரிவித்தார்.
இன்று நாட்டில் இருக்கக்கூடிய தமிழ்ப்பள்ளிகளின் தேவைகளின் அடிப்படையில் தமிழ்ப்பள்ளிகளின் புதிய கட்டட கட்டுமானத் திட்டம், கட்டட சீரமைப்பு பணிகள், மேம்பாட்டுத் திட்டங்கள் ஆகியவற்றுக்கு அரசாங்கம் நிதி உதவி வழங்கி வருகிறது. அதே வேளை குறுகிய காலத்தில் அத்திட்டங்களை மேற்கொள்ள அந்த நிதி போதுமானதாக இருக்காது. எனவே அதற்கான நிதிகளை தனியார் நிறுவனங்கள் ஒத்துழைப்புடன், தனி நபர்களின் ஆதரவுடன் திரட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை அருள்குமார் சுட்டிக்காட்டினார்.
இந்த முயற்சியின் மூலமாகத்தான் ஒய்டிஎல் நிறுவனம் மூலமாக இந்த நிதி உதவி பெறப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.ஏற்கெனவே லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளியில் திறந்தவெளி மண்டபம் மற்றும் சிற்றுண்டிச்சாலை கட்டுவதற்கு இதே போன்று தனியார் நிறுவனங்கள், தனி நபர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து 1 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதே போன்ற முயற்சிகள் மூலமாக மேலும் சில தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாடுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் அருள்குமார் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் அருள்குமாருடன், சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி.குணசேகரன், லுக்குட் சட்டமன்ற உறுப்பினர் சூ கென் உவா வருகை புரிந்தனர்.
மேலும் இந்நிகழ்வில் பள்ளி தலைமையாசிரியர் யோகேந்திரன், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கண்ணன், பள்ளி மேலாளர் வாரியத் தலைவரின் பிரதிநிதி வாரியப் பொருளாளர் லிங்கேஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



