தப்பிய கைதி குறித்து தகவல் தந்தால் RM 5000 - கெப்போங் MP அறிவிப்பு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப் 16: சுங்கை பூலோ சிறையிலிருந்து தப்பிச் சென்ற பாகிஸ்தானிய கைதி குறித்து தகவல் தருவோருக்கு கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் RM5,000 வெகுமதியை அறிவித்துள்ளார்.

ஏப்ரல் 9 அன்று இடமாற்றத்தின் போது தப்பிச் சென்ற கைதி, ஒரு வாரம் கழிந்தும் இன்னும் தலைமறைவாக இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று லிம் கூறினார்.

தப்பி ஓடிய இந்தக் கைதியை மீண்டும் காவலில் கொண்டுவர உதவுவதற்காக, அவரைக் கைது செய்ய வழிவகுக்கும் நம்பகமான தகவல்களுக்கு RM5,000 வெகுமதி அளிப்பதாக அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் ஒரு சிறிய குறைபாடு அல்ல என்றும், இது அடிப்படைப் பாதுகாப்பில் ஏற்பட்ட ஒரு "கடுமையான சீர்குலைவு" என்றும் டிஏபி நாடாளுமன்ற உறுப்பினருமான அவர்  சுட்டிக்காட்டினார்.

முழுமையான காவலில் உள்ள ஒரு கைதி, இடமாற்றத்தின் போது எப்படி எளிதாகத் தப்பி ஓட முடியும்? உயர் பாதுகாப்புச் சூழலில் இப்படி ஒரு குறைபாடு எப்படி சாத்தியமாகும்?

இதற்கு யார் பொறுப்பு? ஏழு நாட்கள் ஆகியும் ஏன் இன்னும் தெளிவான விளக்கம் இல்லை? போதும் இந்தத் தாமதம். போதும் இந்த நிச்சயமற்ற நிலை  என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், இந்தத் தோல்விக்கு முழுமையாக விளக்கம் அளிக்கப்பட வேண்டும் என்றும், இதற்குப் பொறுப்பானவர்கள் பொறுப்பேற்க வைக்கப்பட வேண்டும் என்றும் லிம் கூறினார்.

24 வயதான முகமது ஹசான் எனும் அந்த பாகிஸ்தான் நாட்டு பிரஜையைக் கண்டுபிடிப்பதற்காக, காவல்துறை மற்றும் பிற பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாக சிறைத்துறை ஏப்ரல் 10 அன்று தெரிவித்தது.

ஷா ஆலம் நீதிமன்றத்தில் நீதிமன்ற நடவடிக்கைகளை முடித்த பிறகு, அவர் சிறைக்கு மாற்றப்பட்டபோது காவல்துறை காவலில் இருந்து தப்பிவிட்டதாக அத்துறை கூறியது. அவர் மீது குழந்தை சம்பந்தப்பட்ட பாலியல் குற்றங்கள் மற்றும் குடிவரவு தொடர்பான குற்றச்சாட்டுகள் உள்ளன!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *