தீவிரவாத சந்தேகம் – ஆறு இளைஞர்கள் கைது: விரிவான தகவல்கள் பெற அமைச்சர் வலியுறுத்து
- Surendran Sumdraraj
- 07 Mar, 2026
கோலாலம்பூர், மார்ச் 7-
தீவிரவாத செயல்பாடுகளில் தொடர்பு இருந்ததாகச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஆறு இளைஞர்கள் தொடர்பாக விரிவான தகவல்களைப் பெற மலேசிய தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா ஆணையம் (MCMC) விரைவில் அரச மலேசிய காவல்படை (PDRM) உடன் தொடர்பு கொள்ளும் என தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ பாஹ்மி பட்சில் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் சில குறிப்பிட்ட செயலிகள் அல்லது இணைய தளங்கள் தொடர்புடையதாக இருக்கக்கூடும் என்பதால் அவற்றை அடையாளம் காணும் நோக்கில் இந்த நடவடிக்கை அவசியமாகும் என்று அமைச்சர் சொன்னார். அதன்பின் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும், சம்பந்தப்பட்ட தள சேவை வழங்குநர்களுடன் இணைந்து பணியாற்றவும் முடியும் எனவும் அவர் கூறினார்.
தற்போதைய விசாரணை தகவல்களின் அடிப்படையில், கைது செய்யப்பட்ட இளைஞர்களில் சிலர் இணைய விளையாட்டுகள் மற்றும் சமூக ஊடகங்களில் பார்க்கப்படும் சில காணொளிகள் அல்லது உள்ளடக்கங்களின் மூலம் தீவிரவாத இயக்கங்களின் மீது ஆர்வம் கொண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.
எனவே இந்த பிரச்சினையை மிகுந்த கவனத்துடன் அணுக வேண்டிய அவசியம் இருப்பதாக அவர் கூறினார்.
இதற்காக, விரைவில் MCMC அதிகாரிகள் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்துடன் தொடர்பு கொண்டு முழுமையான தகவல்களை பெறும் என்றும், தேவையான உதவிகளை வழங்க தயாராக இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



