தங்கக் கொள்ளையர்கள் 9 பேர் கைது! பினாங்கு போலிஸ் அதிரடி

top-news
FREE WEBSITE AD

ஜார்ஜ் டவுன், ஏப் 3: 'ஆபரேஷன் ஜிங்கா டி கார்டன்' என்ற குறியீட்டுப் பெயரிலான சிறப்பு நடவடிக்கையின் கீழ் மாநிலம் தழுவிய சோதனைகளில், 36 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள தங்கக் கொள்ளையுடன் தொடர்புடைய ஒன்பது பேரை பினாங்கு காவல்துறை கைது செய்துள்ளது. இது ஒரு ஆயுதக் கும்பலுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

மார்ச் 26 முதல் நேற்று வரை நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையில், பினாங்கு படைப்பிரிவின் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களும், செபெராங் பிராய் வடக்கு காவல் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் ஈடுபட்டதாக மாநில காவல்துறைத் தலைவர் அஜிசி இஸ்மாயில் தெரிவித்தார்.

பாராட் டாயா மற்றும் திமோர் லாவுட் மாவட்டங்களில் பல இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளின் விளைவாக, 23 முதல் 43 வயதுக்குட்பட்ட ஏழு உள்ளூர் ஆண்களும் இரண்டு இந்தோனேசியப் பெண்களும் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

“இந்த நடவடிக்கையின் போது, ​​சுமார் 4.3 கிலோ தங்க நகைகள், ஒரு அரிவாள், ஸ்போர்ட்ஸ் ரிம்கள் கொண்ட நான்கு டயர்கள் மற்றும் கொள்ளைச் சம்பவங்களுக்குப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் இரண்டு வாகனங்களையும் காவல்துறை பறிமுதல் செய்துள்ளது.

பினாங்கைச் சுற்றியுள்ள தங்கக் கடைகளில் விநியோகம் அல்லது பரிவர்த்தனைகளுக்காக நகைகளைக் கொண்டு செல்லும் விற்பனையாளர்களை இந்தக் கும்பல் குறிவைத்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது  என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

மார்ச் 26 அன்று காலை 9.20 மணிக்கு செபெராங் பிராய் உத்தாராவில் பதிவான, 6,023.69 கிராம் எடையுள்ள மற்றும் RM3.6 மில்லியன் மதிப்புள்ள நகைகள் இழப்பு தொடர்பான ஒரு கும்பல் கொள்ளை வழக்கை, சந்தேக நபர்களின் கைது மூலம் தீர்த்துவிட்டதாக காவல்துறை நம்புவதாக அஜிஸி கூறினார்.

சந்தேக நபர்களில் மூவருக்குக் கடுமையான குற்றங்களுக்கான குற்றப் பதிவுகள் இருப்பது சோதனையில் தெரியவந்துள்ளது என்றும், அவர்களில் ஒருவருக்கு 17 குற்றங்களும் ஒரு போதைப்பொருள் வழக்கும் உள்ளதாகவும் அவர் கூறினார். 

சந்தேக நபர்களில் மூவருக்கு மெத்தம்பெத்தமைன் போதைப்பொருள் பரிசோதனையில் நேர்மறை முடிவு வந்துள்ளது என்று அவர் கூறினார். மேலும், இன்னும் தலைமறைவாக உள்ள கும்பல் உறுப்பினர்களைக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

குற்றவியல் சட்டத்தின் 395, 397 மற்றும் 109 ஆகிய பிரிவுகளின் கீழ், விசாரணைகளுக்கு உதவுவதற்காக அந்த ஒன்பது சந்தேக நபர்களும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

காவல்துறை விசாரணைகளைப் பாதிக்கக்கூடிய அல்லது தேவையற்ற பொதுக் கவலையை ஏற்படுத்தக்கூடிய யூகங்களைத் தவிர்க்குமாறு அஜீஸி அறிவுறுத்தினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *