சபா லஞ்ச ஊழல்-எம்ஏசிசி விசாரணையில் ஒளிவுமறைவு இருக்காது - அன்வார்!
- Muthu Kumar
- 22 Nov, 2024
கோலாலம்பூர், நவ. 22
சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் சபா மாநில சட்டமன்ற உறுப்பினர்களுடன் தொடர்புபடுத்தப்பட்டிருக்கும் லஞ்ச ஊழல் விவகாரம் மீதான விசாரணையில், எந்த ஒரு மூடிமறைப்புச் செயலும் இடம் பெற்றிருக்காது என்று, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
லஞ்ச ஊழலுக்கு எதிரான போரில் அரசாங்கத்தின் ஈடுபாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியதோடு, சபாவில் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படும், ஒரு சுரங்கத் திட்டம் மீதான மலேசிய லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) விசாரணை உட்பட யாரும் பாதுகாக்கப்பட மாட்டார்கள் என்றும், அன்வார் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
“இந்த விவகாரம் மீதான தனது விசாரணை தொடரப்படும் என்றும் அதில் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுவோர் வாக்குமூ லங்களை அளிப்பதற்காக அழைக்கப்பட்டு வருவதாக வும், எம்ஏசிசி என்னிடம் தெரிவித்திருக்கிறது.“ஆதலால், விசாரணையில் தலையிடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை" என்று, நேற்றைய மக்களவைக் கூட்டத்தில் அன்வார் தெரிவித்துள்ளார்.
லஞ்ச ஊழலுக்கு எதிரான அரசாங்கத்தின் திட்டம் குறித்து, பெரிக்காத்தான் நேஷனலின் பெண்டாங் நாடாளுமன்ற உறுப்பினர் அவாங் ஹஷிம் எழுப்பிய ஒரு கேள்விக்கு, தம்புன் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்வார் இவ்வாறு பதிலளித்தார். சபா மாநிலத்தைச் சேர்ந்த சில சட்டமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து செயல்பட்டிருப்பதாகக் கூறப்படும் ஒரு வர்த்தகருடன், கனிமங்கள் திட்டத்திற்கான லைசென்ஸ் விவகாரத்தில் லஞ்ச ஊழல் நிகழ்ந்திருப்பதாகக் கூறப்படுவது குறித்து எம்ஏசிசி தற்போது விசாரணைநடத்தி வருகிறது. இதன் தொடர்பிலான விசாரணைக்கு உதவுவதற்காக, சபா கனிம நிர்வாக நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) ஜொந்தி எங்கிஹோன் அழைக்கப்பட்டிருப்பதாக, எம்ஏசிசி நேற்றுமுன்தினம் புதன்கிழமை கூறியிருந்தது.
இச்சம்பவம் தொடர்பில் சமூக வலைத் தளங்களில் அண்மையில் ஒரு காணொளியை பதிவேற்றம் செய்திருந்த, தம்மை தகவலளிப்பவர் என்று கூறிக் கொண்டிருக்கும் ஒருவருடன் கூட்டுச் சேர்ந்து செயல்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஜொந்திக்கு எதிராக, போலீஸ் மற்றும் எம்ஏசிசியில் புகார்கள் செய்யப்பட்டுள்ளன.தம் மீதான அத்தகைய குற்றச்சாட்டை கடந்த ஞாயிற்றுக்கிழமை மறுத்திருந்த ஜொந்தி, அந்த தகவலளிப்பவருக்கும் சில சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் தாம் ஒரு “மத்தியஸ்தராக' செயல்பட்டதாக கூறப்படுவது “சுத்தப் பொய்” என்று கூறியிருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பில் வாக்குமூலங்களை அளிக்க வருமாறு எம்ஏசிசி இதுவரையில் ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்திருக்கிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *