மூன்று வாரங்களுக்குள் அமைச்சரவையில் மாற்றம் - ஸம்ரி கோடிக்காட்டினார்!
- Muthu Kumar
- 08 Nov, 2025
கோலாலம்பூர், நவ. 8-
அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படலாம் என்று உயர்கல்வி அமைச்சர் ஸம்ரி அப்துல் காடிர் நேற்று கோடிக்காட்டினார்.
உயர்கல்வி அமைச்சுக்குத் தாம் தொடர்ந்து தலைமையேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட வேண்டி வந்தாலும், வரும் ஆண்டுகளில் "புத்ராஜெயா சிந்தனை விழா "எனும் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறுவதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆதரவளித்து வருவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார். கல்வி தொடர்பான சிந்தனைகளைப் பரிமாறிக் கொள்ளும் நோக்கத்திலும் பொதுமக்களுக்கு எளிதில் உயர்கல்வி கிடைப்பதை உறுதிசெய்யும் நோக்கத்திலும் புத்ராஜெயா சிந்தனை விழா நடத்தப்பட்டது. அவ்விழாவை அன்வார் அதிகாரப்பூர்வமாக நிறைவுசெய்தார்.
என்னுடைய செனட்டர் பதவி விரைவில் முடிவடைய போகிறது. அதன் பிறகு நான் அமைச்சராக நீடிக்க முடியாது. இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் அது நடக்கலாம் என்றார் ஸம்ரி.அமைச்சரவை மாற்றத்திற்கான பெயர் பட்டியல் தயாராகி விட்டதா என்று அன்வாரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, உங்களிடம் பரிந்துரைகள் எதுவும் இருந்தால், என்னிடம் தாருங்கள் என்று வேடிக்கையாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதியன்று செனட்டராக ஸம்ரி பதவியேற்றார். அவரின் பதவிக் காலம் வரும் டிசம்பர் 2ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
அன்றைய தினம் உள்துறை அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில், சமய விவகார அமைச்சர் நயீம் மொக்தார், முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு ஸப்ருல் அஸிஸ் ஆகியோரும் செனட்டர்களாகப் பதவியேற்றனர்.
தற்போது அமைச்சரவையில் இரண்டு இடங்கள் காலியாக உள்ளன. பொருளாதார அமைச்சராக இருந்த ரஃபிஸி ரம்லியும் இயற்கை வள அமைச்சராக இருந்த நிக் நஸ்மி நிக் அமாட்டும் கடந்த மே மாதம் அமைச்சர் பொறுப்புகளைத் துறந்ததே இதற்கு காரணமாகும்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



