ஆப்கான் அதிகாரிகளை வரவேற்று உபசரித்ததை ஃபட்லினா தற்காத்தார்!
- Muthu Kumar
- 22 Nov, 2024
கோலாலம்பூர், நவ. 22 -
தலிபான் தலைமையிலான ஆப்கானிஸ்தானிய அதிகாரிகளை கல்வி அமைச்சு அண்மையில் வரவேற்று உபசரித்து அனுப்பி இருந்ததை, கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் தற்காத்துப் பேசியுள்ளார்.அந்த இஸ்லாமிய குடியரசுக்கு உதவும் மத்திய அரசாங்கத்தின் கொள்கைக்கு இணங்கவே கல்வி அமைச்சு அவ்வாறு செயல்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான உதவிகள் அடிப்படையில், ஆப்கானிஸ்தானுக்கு உதவ மத்திய அரசாங்கம் தயாராக இருப்பதாக, நேற்று வியாழக்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் ஃபட்லினா தெரிவித்தார்.
“அப்கானிஸ்தானுடனான ஒத்துழைப்பை அதிகரிக்கச் செய்ய மலேசியா தயாராக இருக்கிறது என்று, கடந்த ஆண்டில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வெளியிட்டிருந்த அறிக்கையின் அடிப்படையில் ஆப்கானிஸ்தானுக்கு உதவ கல்வி அமைச்சு ஈடுபட்டிருக்கிறது.
“கல்வி மீதான உரிமையை மறுக்க முடியாது. பெண்கள் மற்றும் சிறுமிகளின் கல்விக்கான உரிமையை நிலைநாட்ட மலேசியா உறுதி பூண்டுள்ளது” என்றும் அவர் கூறினார். இம்மாத துவக்கத்தில் ஆப்கானிஸ்தானிய கல்வி அமைச்சைச் சேர்ந்த அதிகாரிகளை வரவேற்று உபசரித்த தனது முடிவு குறித்து, ஜசெக தலைவர் லிம் குவான் எங் கேள்வி எழுப்பி இருந்ததற்கு ஃபட்லினா இவ்வாறு பதிலளித்தார். தலிபான் தலைமையிலான ஆப்கானிஸ்தானிய அரசாங்கம் பெண்களுக்கான கல்வி மீது சர்ச்சைக்குரிய கொள்கைகளை அமல்படுத்தி இருப்பதால், அவர்களின் வருகை கவலையளிக்கும் வகையில் இருக்கிறது என்று, பாகான் நாடாளுமன்ற உறுப்பினருமான குவான் எங் நேற்றுமுன்தினம் புதன்கிழமை குறிப்பிட்டிருந்தார்.
வெளியுறவு அமைச்சிட மிருந்து வந்த அறிவுரை யைத் தொடர்ந்து,ஆப்கானிஸ்தானிய தூதுக் குழுவினர் மலேசியாவுக்கு வருகை புரிந்திருந்ததாகவும் ஃபட்லினா தெரிவித்தார்.அத்தூதுக் குழுவினரின் மலேசியாவுக்கான வருகை முடியும் வரையில், இதர நிறுவனங்களும் அமைச்சுகளும் பாதுகாப்பு சோதனை மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்ததாக அவர் தெரிவித்தார்.
சிறுமிகள் மற்றும் பெண்களுக்கான கல்வி உட்பட மலேசியாவின் கல்வி முறை குறித்து அவர்களுக்கு விளக்கங்கள் அளிக்கப்பட்டதாக ஃபட்லினா கூறினார். “அவர்களின் வருகை முடிவுற்றதுடன் அவர்கள் தங்கள் நாட்டிற்கு திரும்பிவிட்டனர். கல்வி குறித்து மலேசியாவின் கருத்துகள் அவர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது” என்று, பினாங்கில் சனிக்கிழமை ஃபட்லினா கூறியிருந்தார். பெண்களுக்கு எதிராக தலிபானிய நிர்வாகம் தடைகளை விதித்திருக்கிறது. அத்தகைய தடைகளை ஐநா 'பாலின நிறவெறி' என்று வருணித்திருக்கிறது.
பெண் பிள்ளைகள் இடைநிலைப் பள்ளிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் கல்வி கற்க ஆப்கானிஸ்தான் அனுமதிக்கவில்லை. ஆப்கானிஸ்தான் மட்டும்தான், உலகில் இத்தகைய தடைகளை விதித்திருக்கும் ஒரே நாடாகும்.தலிபான் ஆட்சியின் கீழான ஆப்கானிஸ்தானிய அரசாங்கத்துடன் ஒத்துழைக்கவும் உறவுகளை மேம்படுத்தவும் மலேசியா தயாராக உள்ளது என்று, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த ஆண்டில் கூறியிருந்தார்.எனினும், பெண்களுக்கான கல்வி விஷ்யத்தை மலேசியா தீர்க்க விருப்பதாகவும் கல்வியைப்பெற அவர்களுக்கு உரிமை இருக்கிறது என்றும் அன்வார் கூறியிருந்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *