பிரதமருடனான பக்காத்தான் எம்பிக்கள் கூட்டத்தில் ரஃபிஸியும் நிக் நஸ்மியும் கலந்து கொள்ளவில்லை!

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, ஜூலை 15

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கும் பக்காத்தான் ஹராப்பான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் செனட்டர்களுக்கும் இடையில் நேற்று திங்கள்கிழமை நடந்த ஒரு ரகசிய சந்திப்புக் கூட்டத்தில், பிகேஆர் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லியும் முன்னாள் உதவித் தலைவர் நிக் நஸ்மி நிக் அமாட்டும் கலந்து கொள்ளவில்லை.

தனிப்பட்ட பணி காரணமாக தற்போது தாம் சிங்கப்பூரில் இருப்பதால் அக்கூட்டத்தில் தம்மால் கலந்து கொள்ள முடியவில்லை என்று. செத்தியாவங்சா நாடாளுமன்ற உறுப்பினருமான நிக் நஸ்மி தெரிவித்தார்.
"சிங்கப்பூருக்கான தமது பயணம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருந்தது” என்று அவருடன் தொடர்பு கொண்டபோது தெரிவித்தார். இவரை தவிர்த்து, முன்னாள் பொருளாதாரத்துறை அமைச்சருமான ரஃபிஸியும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

முன்னதாக, பக்காத்தான் ஹராப்பான் அமைச்சர்களின் கார்கள், பிரதமரின் அதிகாரத்துவ இல்ல வளாகத்தினுள் நுழைவதைக் காணமுடிந்தது.சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சுல்கீப்ளி அமாட் மற்றும் வீடமைப்பு, ஊராட்சிமன்றத்துறை அமைச்சர் ஙா கோர் மிங் ஆகியோரின் கார்களும் அவற்றில் அடங்கும்.

பிரதமரின் அதிகாரத்துவ கார் மாலை 4.30 மணிக்கும் ஸ்ரீ பெர்டானா வளாகத்திற்குள் நுழைந்தது.நீதித்துறை சம்பந்தப்பட்ட விவகாரங்கள் மற்றும் எதிர்வரும் மக்களவைக் கூட்டம் உட்பட பல்வேறு நடப்பு விவகாரங்கள் குறித்தும் அக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

முன்னதாக, அன்வார் கடந்த வெள்ளிக்கிழமை இரவில் தேசிய முன்னணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதன் அமைச்சர்களுடன் சந்திப்பு நடத்தி இருந்தார்.

அச்சந்திப்புக் கூட்டத்தில், வரிவிதிப்பு, ரோன்95 பெட்ரோல் உதவித்தொகை சம்பந்தப்பட்ட வதந்திகள் மற்றும் நீதித்துறை தொடர்பிலான விவகாரங்கள் குறித்தும் அன்வார் விளக்கமளித்ததாகக் கூறப்பட்டது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *