ரஃபிஸியின் இழப்பு பிகேஆரை பாதிக்கச் செய்யும் - சரவாக் அமைச்சர் அப்துல் கரிம்!

top-news
FREE WEBSITE AD

கூச்சிங், ஜூலை 16-

கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் அவரின் புதல்வி நூருல் இஸ்ஸாவுடன் ரஃபிஸி ரம்லி தொடர்ந்து இருந்திருந்தால், பிகேஆர் கட்சி இன்று ஒரு வலிமையான நிலையில் இருந்திருக்கும் என்று, சரவாக் மாநில அமைச்சர் அப்துல் கரிம் ரஹ்மான் ஹம்ஸா கூறியுள்ளார். ரஃபிஸி ஒரு "திறமையான அரசியல் வியூகவாதி" என்றும் கட்சித் தலைமைத்துவத்தில் இருந்து அவர் விலகி இருப்பது கட்சிக்கு ஏற்பட்டுள்ள ஓர் இழப்பு என்றும் கரிம் கூறியுள்ளார்.

“அன்வார் மற்றும் நூருலுடன் அவர் இன்னமும் ஒன்றாக இருந்திருந்தால், பிகே ஆர் மிகவும் வலிமையான கட்சியாக இருக்கும் என்று நான் நினைக்கின்றேன். அவரைப் போன்ற திறமையான ஒருவரை இழந்திருப்பது வருத்தமான ஒன்றாகும் என்று, ஒரு நேர்காணலில் கரிம் குறிப்பிட்டார்.மே மாத இறுதியில் நடைபெற்ற பிகேஆர் கட்சித் தேர்தலில், ரஃபிஸியும் நிக் நஸ்மி நிக் அமாட்டும் முறையே துணைத் தலைவர் மற்றும் உதவித் தலைவர் பதவிகளை தற்காத்துக் கொள்வதில் தோல்வி அடைந்த பின்னர் அவர்கள் இருவரும் தங்களின் அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்தனர்.

தலைமை நீதிபதி பதவி உட்பட நீதித் துறையின் உயர்மட்டப் பதவிகளுக்கான நியமன தாமதம் மற்றும் அதில் தலையீடு இருப்பதாகக் கூறப்பட்டுள்ள விவகாரத்தை விசாரிக்க, ஓர் அரச விசாரணை ஆணையம் (ஆர்சிஐ) அமைக்கப்பட வேண்டும் என்று, ரஃபிஸி உட்பட ஒன்பது பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த வாரத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

பொதுமக்களின் நம்பிக்கையை இழக்கச் செய்திருப்பதாகக் கூறி, ஒரு பெட்டிசனை தொடங்கிய ரஃபிஸி, இம்மாதம் 13ஆம் தேதி கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரில் தொடங்கப்பட்ட கருத்தரங்குகள் தேசிய அளவில் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார்.கடந்த 14 ஆவது பொதுத் தேர்தலில் ஆளும் தேசிய முன்னணி அரசாங்கத்தைக் கவிழ்ப்பதில் ரஃபிஸி ஒரு முக்கிய பங்கை ஆற்றியதாக, பெசாக்கா பூமிபுத்ரா பெர்சத்து (பிபிபி) கட்சியின் தகவல் பிரிவுத் தலைவருமான கரிம் தெரிவித்தார்.

"2018இல் தேசிய முன்னணி வீழ்ச்சி அடைவதற்கு மூளையாக இருந்தவர்களில் அவரும் (ரஃபிஸி) ஒருவர். அவரை இழப்பது நல்லதல்ல" என்று சரவாக் சுற்றுலா, தொழில்துறை மற்றும் கலைத்துறை அமைச்சருமான கரிம் கூறினார். "அரசாங்கத்தில் இருந்த வரைக்கும் அவர்,

அரசாங்கத்தை பற்றி மோசமாக பேசியதில்லை. ஆனால், இப்போது அமைச்சரவையில் இல்லாததால், பழைய ரஃபிஸியாக அவர் மாறியிருக்கிறார்" என்று கூறிய கரிம், கட்சிக்குள் பிளவுகள் ஏற்படுவதைக் குறைப்பதற்கான பணியில் பிகேஆர் ஈடுபட வேண்டும் என்றார். தமது தலைமைத்துவத்தில் அன்வார் உள் சவால்களை எதிர்நோக்கினால், அவரை குறைகூறி வருவோரை அது “மகிழ்விக்கும்" என்றும் ஆனால் இறுதியில், மலேசியர்கள் நல்லாட்சி, தூய்மையான தலைமை மற்றும் நிறுவன சீர்திருத்தங்களை எதிர்பார்ப்பதாக கரிம் தெரிவித்தார். "பிகேஆர், ஜசெக, அம்னோ மற்றும் இதர ஆளும் கட்சிகள், ஒரு சிறந்த அரசாங்கத்தை வழிநடத்தும் என்பதைக் காண மலேசியர்கள் விரும்புகின்றனர்.

மக்கள் மீது பரிவு காட்டும் ஓர் அரசாங்கத்தைத்தான் அவர்கள் விரும்புகின்றனர். அனைத்து அம்சங்களிலும் சுத்தமான ஓர் அரசாங்கத்தையே அவர்கள் விரும்புகின்றனர்" என்றும் கரிம் தெரிவித்தார். நாட்டை அம்னோ ஆட்சிப் புரிந்து வந்தபோது ஊழல்கள் மலிந்து காணப்பட்டத்தை அவர் ஒப்புக் கொண்டார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *