மூன்றாம் முறையாக பிரதமர் பதவியா? சாத்தியத்தை மறுத்தார் மகாதீர்!
- Muthu Kumar
- 19 Jul, 2025
அலோர்ஸ்டார், ஜூலை 19
பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று மத்திய அரசாங்கத்தை அமைக்கும் பட்சத்தில், மூன்றாம் முறையாக பிரதமர் பதவிக்கு வரும் எண்ணம் தமக்கு இல்லை என்று துன் டாக்டர் மகாதீர் முகமது நேற்று தெரிவித்தார்.
அரசாங்கத்திற்குத் தலைமையேற்று வழிநடத்தும் ஆற்றல் எனக்கு இப்போது கிடையாது.ஆனால், பல ஆண்டுகால அரசியல் அனுபவம் இருப்பதால், தேவையான ஆலோசனைகளை என்னால் வழங்க முடியும் என்று அண்மையில் நூறாவது பிறந்த நாளைக் கொண்டாடியவரான மகாதீர் தெரிவித்தார்.
"நான் இப்போது வயோதிகனாகி விட்டேன். நூறு வயதாகி விட்டது.வழக்கம் போல் என்னால் ஆவேசமாக உரையாற்ற முடியவில்லை. இளைய தலைமுறையினருக்கான வாய்ப்பை நான் கைப்பற்ற விரும்பவில்லை.இளைய தலைமுறையினரை வரவேற்கிறேன். மீண்டும் பிரதமர் பதவியை ஏற்க மாட்டேன்.
இரண்டு முறை பிரதமராக இருந்ததே போதும்" என்று அலோர்ஸ்டாரில் ஹிம்புனான் மண்டாட் நெகாராவான் எனும் நாட்டுப் பற்றாளர் பேரணியில் உரையாற்றியபோது மகாதீர் கூறினார்."இருபத்து நான்கு ஆண்டுகளாக பிரதமர் பதவியில் இருந்து விட்டேன். எண்பது ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் இருக்கிறேன். இதனால், சில அறிவுரைகளை வழங்குவதற்கு விரும்புகிறேன்" என்றார் அவர்.
அரசாங்கத்தை நம்மால் மாற்ற முடிந்தால், அறிவுரைகளை ஏற்று ஒரு பிரதமர் நமக்கு கிடைக்கலாம். வறுமை உட்பட பல பிரச்சினைகளை அவரால் தீர்க்க முடியும் என நம்புகிறேன். ஏழ்மையை ஒழிப்பது அரசாங்கத்தின் முன்னுரிமையாக இருக்க வேண்டும். அதனைப் பெரிக்காத்தான் நேஷனல் சாதிக்க முடியும் என்றார் மகாதீர்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை பதவியை விட்டு விலகக் கோரி இம்மாதம் 26ஆம் தேதியன்று பெரிக்காத்தான் ஏற்பாட்டில் கோலாலம்பூரில் நடத்தப்படவிருக்கும் கண்டனப் பேரணியின் முன்னோட்டமாக நாட்டுப்பற்றாளர் பேரணி நடத்தப்பட்டது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



