கட்சிகளுக்கு இடையிலான உறவை சீர்குலைத்து விடாதீர்-ஸாஹிட் கோரிக்கை!
- Muthu Kumar
- 18 Aug, 2025
பாசிர் சாலாக், ஆக. 18-
ஒற்றுமை அரசாங்கத்தில் இடம் பெற்றிருக்கும் உறுப்புக் கட்சிகளுக்கு இடையிலான உறவை சீர்குலைத்து விடாதீர்கள். அதனால், தங்களுக்கு இடையிலான வாய்ச் சண்டையை உடனடியாக நிறுத்திக் கொள்ளுங்கள். அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் அக்மால் சாலேயையும் ஜசெக இளைஞர் பிரிவுத் தலைவர் வூ கா லியோங்கையும் தேசிய முன்னணி தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி இவ்வாறு வலியுறுத்தி இருக்கின்றார்.
ஒற்றுமை அரசாங்கத்தில் நிலவும் உறவை சீர்குலைத்துவிடும் அளவுக்கு நிலைமையை கொண்டு சென்றுவிட வேண்டாம் என்பதுதான் அவர்கள் இருவருக்கும் விடுக்கப்படும் முக்கிய தகவலாகும் என்று ஸாஹிட் கூறியுள்ளார்.நல்லிணக்கத்தை பேணுவதற்காக, கட்சித் தலைமைத்துவத்தின் முடிவு அவசியம் பின்பற்றப்பட வேண்டியது கட்டாயம் என்று, அக்மாலின் பெயரைக் குறிப்பிடாமல், அம்னோ தலைவருமான ஸாஹிட் தெரிவித்துள்ளார்.
"கட்சியின் உயர்மட்டத் தலைமைத்துவத்தில் நாங்கள் ஒரு முடிவை செய்திருக்கின்றோம். ஒரு விவகாரத்தை பிரபலமாக்க அல்லது அதன் வழி தங்களை பிரபலப்படுத்திக் கொள்வதற்காக இவ்வாறு செய்ய வேண்டாம்.
“இறுதியில், கட்சிகளுக்கு இடையிலான நல்ல உறவை அது சீர்குலைக்கச் செய்து விடும். அடிமட்ட அளவிலும் அதாவது அடிமட்ட உறுப்பினர்கள் மத்தியிலும் விரிசல்களை ஏற்படுத்தி விடும்" என்று ஸாஹிட் கூறியதாக சினார் ஹரியான் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
அரசியல் ரீதியில் எடுக்கப்படும் முடிவுகள் ஒற்றுமைக் கூட்டணியில் நிலவும் உறவை பலிகடாவாக்கி விடக்கூடாது என்று, கா லியோங்கின் பெயரைக் குறிப்பிடாமல் ஸாஹிட் தெரிவித்தார்."ஒரு சம்பவம் காரணமாக, 18 கட்சிகள் சேர்ந்து உருவாக்கி இருக்கும் மடானி அரசாங்கம் ஆட்டம் காணும்
அளவுக்கு அரசியல் முடிவு எடுக்கப்படுவதைக் காண நாங்கள் விரும்பவில்லை" என்று துணைப் பிரதமருமான ஸாஹிட் கூறினார்.
அக்மாலுடனான தனது அனைத்து அரசியல் உறவுகளையும் முறித்துக் கொள்ளுமாறு, கட்சித் தலைமைத்துவத்தை கா லியோங் கேட்டுக் கொண்டிருப்பது குறித்து கருத்து கேட்டபோது. "இந்த விவகாரத்தில் அரசியல் நடவடிக்கையும் சட்ட நடவடிக்கையும் நுழைந்திருக்கவும் கூடாது" என்று அவர் தெரிவித்தார்.
பினாங்கின் கப்பளா பத்தாஸில் உள்ள ஒரு கடையின் உரிமையாளர் தமது கடையில் தேசியக் கொடியை தலைகீழாக பறக்கவிட்ட சம்பவத்தை அக்மால் கையாண்ட விதம் தொடர்பில், ஜசெகவின் கட்சித் தலைமைத்துவத்திடம் கா லியோங் அத்தகைய கோரிக்கையை முன்வைத்திருந்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



