ஜாஹிட்டின் மெகா கூட்டணி! பெர்சாத்து பரிசீலிக்கும்! - முகைதீன் யாசின்
- Shan Siva
- 19 Jan, 2026
கோலாலம்பூர், ஜன 19: பெர்சாத்து தலைவர் முகைதீன் யாசின், அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடி கூறிய ஒரு 'மாபெரும் கூட்டணி' குறித்த கருத்துக்கு பதிலளித்துள்ளார்.
பெர்சாத்து சார்பில் யாருக்கும் இந்த விவகாரத்தில் எந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை. மேலும், இது பெர்சாத்து உச்ச மன்றக் கூட்டங்களில் ஒருபோதும் விவாதிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பெர்சாத்து மற்றும் அம்னோ இடையே எந்தவிதமான ஒத்துழைப்பும் கட்சி அதிகாரப்பூர்வ வழிமுறைகள் மூலம், இரு கட்சிகளின் உயர்தர தலைமையினர் பங்கேற்பில் நடத்தப்பட வேண்டும்.
இந்தப் பேச்சுவார்த்தைகள் வெளிப்படையாக நடைபெற வேண்டும். மேலும், பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியில் உள்ள எங்கள் கூட்டணி கட்சிகளின் கருத்துகளும், ஒற்றுமை அரசில் அம்னோவின் நிலைப்பாடும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று முகைதீன் யாசின் தெரிவித்தார்.
இதற்கிடையில், இந்த விவகாரத்தில் திறந்த மனப்பான்மையுடன் அணுக விரும்புகிறேன், என்று அவர் கூறி, அம்னோ தலைவர் ஜாஹிட் ஹமிடி முன்வைத்த முன்மொழிவை மேலும் தெளிவான தகவல்கள் கிடைத்த பின் பெர்சாத்து பரிசீலிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு, ஜாஹிட் ஹமிடி பாஸ் மற்றும் பெர்சாத்து சார்ந்த சில தலைவர்களுடன் சந்திப்பில் மலாய் மக்களை ஒன்றிணைக்கும் “மாபெரும் கூட்டணி”முறையில் ஆலோசனை நடத்தியதாக உறுதிப்படுத்தியிருந்தார்.
இந்த மாபெரும் கூட்டணியில், மலாய்-முஸ்லிம் கட்சிகளைச் சேர்ந்த குறைந்தது 10 மூத்த தலைவர்கள்,அதாவது கட்சித் தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் பங்கேற்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அம்னோ பொதுக்கூட்டத்தில், அனைத்து மலாய்-முஸ்லிம் கட்சிகளை ஒரே குடையின் கீழ் ஒன்றிணைப்பதே இந்தப் புதிய மாபெரும் கூட்டணியின் நோக்கம் என ஜாஹிட் ஹமிடி கூறியிருந்தார்.
மேலும், இந்தக் கூட்டணி தற்போதைய ஒற்றுமை அரசுக்கு எந்தவிதமான அச்சுறுத்தலையும் உண்டாக்காது என்றும் அவர் உறுதி செய்துள்ளார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



