அறிவியல் விழாவில் யாஹ்யா அவால் தமிழ்ப்பள்ளியின் சாதனை தொடர்கிறது!
- Muthu Kumar
- 06 Oct, 2025
(கோகி கருணாநிதி)
ஜொகூர் பாரு, அக்.6-
ஒவ்வோர் ஆண்டும் அஸ்தி ஏற்பாட்டில் அறிவியல் விழா மாநிலம் மற்றும் தேசிய ரீதியில் நடைபெற்று வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றாகும். இவ்வாண்டும் இவ்விழா மிகவும் நேர்த்தியாக நடைபெற்று முடிந்துள்ளது. அவ்வகையில் ஜாலான் யாஹ்யா அவால் தமிழ்ப்பள்ளி ஒவ்வோர் ஆண்டும் இவ்விழாவில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வெற்றிக்கனிகளைப் பறித்து வருகின்றனர்.
இவ்வாண்டு சாஆ தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற மாநில அறிவியல் விழாவில் யாஹ்யா அவால் தமிழ்ப்பள்ளி 4ஆம் நிலையில் வெற்றி பெற்ற வேளையில் தலைநகர் செராஸ் இம்பி மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற 19வது தேசிய இளம் ஆய்வாளர்கள் அறிவியல் விழாவில் 70 தமிழ்ப்பள்ளிகள் கலந்து கொண்ட நிலையில் யாஹ்யா அவால் தமிழ்ப்பள்ளி 6வது நிலையில் வெற்றி பெற்று வெள்ளி பதக்கத்தைத் தட்டிச் சென்றது.
2024இல் மாநிலத்தில் 9ஆவது நிலையைப் பெற்ற வேளையில் இவ்வாண்டு 4ஆம் நிலையிலும் 2024ல் தேசியத்தில் நடைபெற்ற போட்டியில் 7ஆவது நிலையைப் பெற்ற வேளையில் (வெண்கலப் பதக்கம்) இவ்வாண்டு 6வது நிலைக்கு (வெள்ளிப் பதக்கம்) சென்றது மிகவும் பெருமையாக இருப்பதாக அறிவியல் பாடப் பணிக்குழு தலைவியான ஆசிரியை திருமதி லதா வேணுகோபால் தெரிவித்தார்.
இவ்வாண்டு ரிஷி விஷ்ணுவர்தன், ரிஷி வர்மன் தமிழரசன், ஹர்ஷன் விஜயசூரியன், மதுமிதா தமிழாசன், யாஷினி பாலமுருகன் ஆகிய மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இம்மாணவர்கள் எந்தப் பழவகையின் விதை அதிக ஆற்றலை உருவாக்குகின்றது என்பதைப் பரிசோதிப்பதாகும். மேலும், அந்த விதையை அடிப்படையாகக் கொண்டு சக்தியூட்டும் உணவு தயாரிக்கப்பட்டது.
இப்பரிசோதனையின் மூலம் மாம்பழத்தின் விதை அதிக ஆற்றலை கொண்டது என்பதை அறிந்து அதிலிருந்து சக்தியூட்டும் உணவு தயாரிக்கப்பட்டது. தேசியத்தில் பார்வையாளர்களுக்கு இவ்வுணவு, மிட்டாய் வகையில் தயாரித்து வழங்கப்பட்டது. தேசிய ரீதியில் நடைபெற்ற போட்டியில் சிறப்புப் பிறமுகர்களில் ஒருவர் இந்த மிட்டாய் வகையைத் தாம் வாங்கிக் கொள்வதாகவும் அதனைத் தமது உணவகத்தில் விற்கப்போவதாகவும் உறுதியளித்திருப்பதாக
தலைமையாசிரியர் கூறினார்.
யாஹ்யா அவால் தமிழ்ப்பள்ளியின் சாதனைக்கும் வெற்றிக்கும் பாடுபட்ட ஆசிரியர்கள் லதா வேணுகோபால், காயத்திரி சின்னத்தம்பி, அமுதா சின்னையா, அனுராதா முனுசாமி, அறிவியல் ஆசிரியர்கள், துணைத்தலைமையாசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி மேலாண்மை வாரியம், கலந்து கொண்ட மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவிய அனைவருக்கும் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார் பள்ளியின் தலைமையாசிரியர் ப.குணாளன். மேலும், இவ்விழாவினை சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கும் அஸ்திக்கும் நன்றி கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



