ஸாரா மரணம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்காமல் அமைதி காப்பதேன்-ஃபட்லினாவிடம் சைஃபுடின் கேள்வி!
- Muthu Kumar
- 25 Aug, 2025
கோலாலம்பூர், ஆக. 25
சபாவைச் சேர்ந்த ஸாரா கைரினா மகாதீர் என்ற மாணவியின் மரணம் தொடர்பில் மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் தவறி இருப்பது குறித்து பெர்சத்து கட்சியின் உச்சமன்ற உறுப்பினர் சைஃபுடின் அப்துல்லா தமது ஏமாற்றத்தை வெளிப்படுத்தி இருக்கின்றார்.
ஸாரா கைரினா மரணம் குறித்து பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் பேசியிருக்கின்றனர்.ஆனால், கடந்த புதன்கிழமை 13ஆவது மலேசியத் திட்டம் மீதான விவாதத்தை முடித்து வைத்து உரையாற்றும்போது எழுப்பப்பட்ட பல கேள்விகளில் ஒன்றுக்குக் கூட ஃபட்லினா பதிலளிக்கவில்லை என்று. இண்ட்ரா மக்கோத்தா நாடாளுமன்ற உறுப்பினருமான சைஃபுடின் தெரிவித்தார்.
"ஸாரா விவகாரம், விசாரணை, சவப்பரிசோதனை மற்றும் ஒரு நியாயமான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்படும் என்ற பொதுமக்களின் நம்பிக்கை குறித்து நான் கேள்வி எழுப்பினேன். ஸாரா மற்றும் பகடிவதை விவகாரம் குறித்து பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களும் மக்களவையில் பேசினர்.
"ஆனால், விவாதங்களை முடித்து வைத்து பேசும்போது கல்வி அமைச்சர் அவை குறித்து ஒரு வார்த்தைகூட பேசவில்லை' என்று சைஃபுடின் கூறினார்.கடந்த ஜூலை 30ஆம் தேதி மக்களவையில் நடந்த கல்வி (திருத்தம்) மசோதா மீது விவாதம் நடந்தபோதும் இந்த விவகாரம் குறித்து ஃபட்லினா பேசவில்லை என்று கூறிய ஸைஃபுடின், 'ஸாரா கைரினா மரணம் குறித்து நான் எட்டு கேள்விகளை எழுப்பினேன். ஆனால். அவற்றில் ஒன்றுக்கும் அவர் பதிலளிக்கவில்லை என்றார்.
பள்ளிகளில் நடந்து வரும் பகடிவதைச் சம்பவங்கள் குறித்து கல்வி அமைச்சர் கவலை கொள்கிறாரா இல்லையா என்று அவர் கேள்வி எழுப்பினார்.சபா, பாப்பாரில் தாம் கல்வி கற்ற பள்ளியின் தங்குமிடக் கட்டடத்தின் மூன்றாவது மாடியிலிருந்து ஸாரா கைரினா விழுந்ததாகக் கூறப்பட்ட பின்னர்,கடந்த ஜூன் 16ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் அவர் சுயநினைவு இழந்த நிலையில் காணப்பட்டார்.
பின்னர் அவர் அதே நாளில், கோத்தாகினபாலுவில் உள்ள குயின் எலிசபத் மருத்துவமனையில் மரணமடைந்தார். ஸாராவின் மரணத்தில் குற்றச் செயல் அம்சங்கள் இடம் பெற்றிருக்கின்றனவா மற்றும் அவரின் மரணத்திற்கு என்ன காரணம் என்பதைக் கண்டறியும் மரண விசாரணை வரும் செப்டம்பர் 3ஆம் தேதி தொடங்க விருக்கிறது. இதனிடையே, ஸாராவுக்கு எதிராக அவமதிக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக, கோத்தாகினபாலு சிறார் நீதிமன்றத்தில் கடந்த புதன்கிழமை ஐவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



