பிரதமரைக் குறைகூறியதால் மைமூனின் பதவிக் காலம் நீட்டிக்கப்படவில்லை!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 11-

நீதித்துறையின் பதவி நியமனங்களில் பிரதமர் தலையிடுகிறார் எனும் பொருள்படும் வகையில் பேசிய காரணத்தால்தான் முன்னாள் தலைமை நீதிபதி தெங்கு மைமூன் துவான் மாட்டின் பதவிக் காலம் நீட்டிக்கப்படவில்லை என்று முன்னாள் சட்ட  அமைச்சர் நஸ்ரி அஸிஸ் தெரிவித்துள்ளார்.

மால்டா நாட்டில் தெங்கு மைமூன் அவ்வாறு பேசியதைச் சுட்டிக் காட்டிய நஸ்ரி, நீதித்துறையில் தலையீடு இருப்பதாகக் கூறப்படும் விவகாரம் குறித்து பிரதமர் அன்வார் இப்ராஹிமிடம் அவர் தனிப்பட்ட முறையில் தெரிவித்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.ஆனால், அவ்வாறு செய்யாமல் அனைத்துலக அரங்கில் அவ்விவகாரத்தை அவர் பேசியிருக்கிறார் என்று நஸ்ரி சுட்டிக் காட்டினார்.

பிரதமரின் தலையீடு இருந்தால் அவ்விவகாரத்தை அமைதியான முறையில் கையாண்டிருக்க வேண்டும். பிரதமரை நேரடியாகச் சந்தித்து அதனை முறையிட்டிருக்கலாம்.ஆனால், அதனை விடுத்து மால்டா நாட்டில் அதனைப் பேசியிருக்கக் கூடாது என்றார் நஸ்ரி.

கடந்த ஏப்ரல் மாதம் மால்டாவில் நடைபெற்ற இருபத்து நான்காவது காமன்வெல்த் சட்ட மாநாட்டில் உரையாற்றிய தெங்கு மைமூன், நீதிபதிகளை நியமிக்கும் பிரதமரின் அதிகாரம் அகற்றப்படுமானால், நீதித்துறையில் அரசியல் தலையீடு உள்ளது எனும் ஐயப்பாடு நீக்கப்படலாம் என்று தெரிவித்திருந்தார்.அன்வார் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு முதலீடுகளை ஈர்த்துவரும் வேளையில், தெங்கு மைமூன் இவ்வாறு பேசியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார் நஸ்ரி.

கடந்த 2019ஆம் ஆண்டில் நாட்டின் பதினாறாவது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட தெங்கு மைமூன், ஜூலை 5ஆம் தேதி பணிஓய்வு பெற்றார். நாட்டின் முதலாவது தலைமை நீதிபதி எனும் பெருமைக்குரியவர் மைமூன் ஆவார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *