ஸைன் ரேயனின் தாயாரின் ‘தலைவிதி' இன்று தெரியும்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், அக். 31-

மனஇறுக்க நோயாளியான சிறுவன் ஸைன் ரேயன் அப்துல் மத்தீனின் தாய் இஸ்மானிரா அப்துல் மனாப்பின் 'தலைவிதி' இன்று வெள்ளிக்கிழமை தெரிய வரும்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், உடல் ரீதியில் காயங்கள் ஏற்படும் அளவுக்கு, ஆறு வயதுடைய தமது மகனை கவனிக்கத் தவறியதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டிலிருந்து இஸ்மானிராவை விடுதலை செய்வதா அல்லது அவர் ஒரு குற்றவாளி என்று தீர்ப்பளிப்பதா என்பதை நீதிமன்றம் இன்று முடிவு செய்யும்.

தற்காப்புத் தரப்பினர் காலை 9 மணிக்கு தங்களின் வாதங்களை முடித்துக் கொண்ட பின்னர், செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஷலிஸா வர்னோ தமது தீர்ப்பை வாசிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முப்பது வயதுடைய இஸ்மானிரா உட்பட ஐந்து சாட்சிகளிடம் விசாரணை செய்த பின்னர் தற்காப்புத் தரப்பினர் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி தங்களின் வாதங்களை முடித்துக் கொண்டிருந்தனர். அவர்களின் தற்காப்பு விசாரணை கடந்த ஜூலை 21ஆம் தேதி தொடங்கியது.அதில், இஸ்மானிரா உட்பட சிறார் மனநல நிபுணர் டாக்டர் நோர் அய்ஷா ரோஸ்லி, ஸைன் ரேயனின் தாத்தா ஸஹாரி முஹமர் ரெபா மற்றும் இஸ்மானிராவின் தோழி உமி ஷ ஃபிக்கா ரொஹிஸால் ஆகியோர் சாட்சியங்கள் அளித்திருந்தனர்.

இஸ்மானிராவுக்கு எதிராக குற்றம் சுமத்துவதற்குப் போதுமான முகாந்திரங்களை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிப்பதில் அரசு தரப்பு வெற்றி பெற்றிருப்பதால், இவ்வழக்கில் தம்மை தற்காத்துக் கொள்ளுமாறு இஸ்மானிராவுக்கு நீதிபதி ஷாலிஸா கடந்த ஜூலை 21ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார்.
எனினும், இஸ்மானிராவின் கணவரும் ஸைன் ரேயனின் தந்தையுமான ஸைய்ம் இக்வான் ஸஹாரியை (வயது 30) நீதிமன்றம் இக்குற்றச்சாட்டிலிருந்து விடுவித்து விடுதலை செய்திருந்தது.

ஸைன் ரேயனுக்கு உடல் ரீதியில் பாதிப்பு ஏற்படும் வகையில், அவரை கவனித்துக் கொள்வதை புறக்கணித்ததாக, ஸைய்ம் மற்றும் இஸ்மானிராவுக்கு எதிராக, கடந்த ஆண்டு ஜூன் 13ஆம் தேதி குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. அதை அவர்கள் இருவரும் மறுத்து விசாரணை கோரியிருந்தனர்.கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி நண்பகலுக்கும் 6ஆம் தேதி இரவு 9.55 மணிக்கும் இடையில், பிஜேயூ டமான்சாரா டாமாயில் அவர்கள் அக்குற்றத்தைப் புரிந்ததாக குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 50 ஆயிரம் வெள்ளி அபராதம், 20 ஆண்டு வரைக்குமான சிறை அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும், 2001ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் செக்ஷன் 31(1)(எ)இன் கீழ் அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இவ்வழக்கின் தனது விசாரணையை அரசு தரப்பு கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி முடித்துக் கொண்டிருந்தது. பிப்ரவரி 3ஆம் தேதி தொடங்கி 20 நாட்களுக்கு நடைபெற்ற அவ்விசாரணையில் அது 28 சாட்சிகளை அழைத்திருந்தது.

கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி காணாமல் போனதாகக் கூறப்பட்ட ஸைன் ரேயனின் உடல், மறுநாள் டமான்சாரா டாமாய், இடாமான் அடுக்குமாடியில் உள்ள அவரின் வீட்டுக்கு அருகிலுள்ள ஒரு நீரோடைக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டிருந்தது.தம்மை தற்காத்துக் கொள்ள போராடியதன் காரணத்தினால் அவரின் கழுத்து மற்றும் உடலில் காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்று பிரேதப் பரிசோதனை முடிவுகள் தெரிவித்த பிறகு, அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று நம்பப்பட்டது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *