ஐ.நா தலைவரைச் சந்திக்க அமெரிக்கச் சாலைகளில் பறந்த ஜெய்சங்கரின் கார்!

top-news
FREE WEBSITE AD

அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்ற இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், அங்கு ஏற்பட்ட ஒரு எதிர்பாராத நிர்வாகச் சிக்கலால், சுமார் 670 கிலோமீட்டர் தூரத்தைச் சாலை வழியாகக் கடக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார்.

வான்வெளிப் போக்குவரத்து முடங்கிய நிலையிலும், துணிச்சலாகச் செயல்பட்ட அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகள், அவரைப் பாதுகாப்பாக நியூயார்க்கிற்கு அழைத்துச் சென்ற சுவாரசியமான தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளன.

கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்க அரசாங்கத்தில் ஏற்பட்ட 'நிர்வாக முடக்கம்' காரணமாக, அந்நாடு முழுவதும் வணிக ரீதியிலான விமானப் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது. அந்தச் சமயத்தில், நியூயார்க்கில் ஐநா பொதுச்செயலாளர் அந்தோணியோ குட்டெரெஸைச் சந்திக்க வேண்டிய மிக முக்கியமான பணி ஜெய்சங்கருக்கு இருந்தது.

விமானங்கள் இல்லாததால், அமெரிக்காவின் 'டிப்ளமேடிக் செக்யூரிட்டி சர்வீஸ்' (டி.எஸ்.எஸ்) அதிகாரிகள் ஒரு அதிரடி முடிவை எடுத்தனர். அமெரிக்க-கனடா எல்லையில் உள்ள பாலத்தில் அமைச்சரை வரவேற்ற 27 பாதுகாப்பு ஏஜெண்டுகள் கொண்ட குழு, அங்கிருந்து நியூயார்க்கின் மன்ஹாட்டன் நகருக்குச் சாலை வழியாகவே அவரை அழைத்துச் செல்லத் திட்டமிட்டது.

சுமார் 7 மணி நேரம் நீடித்த இந்தப் பயணம் அத்தனை எளிதாக இருக்கவில்லை. கடும் உறைபனி மற்றும் சாலைகளில் மிகக் குறைந்த பார்வைத் திறன் இருந்தபோதிலும், பாதுகாப்பு அதிகாரிகள் டிரைவர்களைச் சுழற்சி முறையில் மாற்றி, வாகன அணிவகுப்பைத் தொய்வில்லாமல் நடத்தினர்.

பயணத்தின் ஒரு கட்டத்தில், வெடிகுண்டுகளைக் கண்டறியும் மோப்ப நாய் ஒன்று அமைச்சரின் கவச வாகனத்தை மோப்பம் பிடித்துவிட்டு அபாய எச்சரிக்கை விடுத்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்துத் தீவிர சோதனை நடத்தினர். இறுதியில் அது 'தவறான எச்சரிக்கை' என்பது உறுதி செய்யப்பட்ட பின்னரே பயணம் மீண்டும் தொடர்ந்தது.

நியூயார்க் நகருக்குள் நுழைந்தபோது, விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிக்கொண்டு உருந்த ஒரு பெண்ணைப் பாதுகாப்பு ஏஜெண்டுகள் கண்டனர். ஒருபுறம் அமைச்சரின் பாதுகாப்பு மிக முக்கியம் என்றாலும், மற்றொருபுறம் அந்தப் பெண்ணைக் காப்பாற்ற அதிகாரிகள் முயன்றனர். குழுவில் இருந்த ஒரு ஏஜெண்ட் உடனடியாக அப்பெண்ணுக்கு முதலுதவி வழங்கினார். மற்றவர்கள் ஆம்புலன்ஸ் வர வழிவகை செய்தனர். இந்தச் சம்பவத்தால் அமைச்சரின் பாதுகாப்பிற்கு எந்தச் சிறு இடையூறும் ஏற்படாமல் அதிகாரிகள் பார்த்துக்கொண்டனர்.

நிர்வாக முடக்கம் என்ற பெரும் தடையையும் மீறி, 670 கி.மீ தூரத்தைச் சாலை வழியாகக் கடந்து, திட்டமிட்டபடி ஐ.நா பொதுச்செயலாளரைச் சந்தித்தார் எஸ். ஜெய்சங்கர். அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள இந்த அறிக்கை, இரு நாடுகளுக்கு இடையேயான ராஜதந்திர ஒத்துழைப்பிற்குச் சான்றாகப் பார்க்கப்படுகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *