திருநெல்வேலியில், ஆணவப்படுகொலை செய்யப்பட்ட கவின் வழக்கில் முக்கிய திருப்பம்!
- Muthu Kumar
- 31 Jul, 2025
திருநெல்வேலியில், ஆணவப்படுகொலை செய்யப்பட்ட கவின், ஒரு ஐ.டி ஊழியர் என்பது மக்களுக்கு தெரியும்.
ஆனால் அதையும் தாண்டி, அவருக்கென்று ஒரு பெரிய வாழ்க்கை இருந்திருக்கிறது, பெரிய கனவுகளும் இருந்திருக்கிறது. இதையெல்லாம் தகர்க்கும் வகையில், ஒரே நாளில் அவரது ஒட்டுமொத்த வாழ்வும் காணாமல் போயுள்ளது. அவர் குறித்து இணையத்தில் வைரலாகும் தகவல்கள் அனைத்தும் மனதை உலுக்கும் வகையில் இருக்கின்றன. இந்த நிலையில், இவ்வழக்கில் முக்கிய மாற்றம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர்-ஆசிரியை செல்வி ஆகியோருக்கு இரண்டு மகன்கள். இதில் மூத்த மகன் கவின் சென்னையில் உள்ள ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கவின் சிறுவயது முதலே நெல்லை கே டி சி நகர் பகுதி அருகே உள்ள அஷ்டலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த காவல்துறையில் உதவி ஆய்வாளர்களாக பணிபுரிந்து வரும் சரவணன் மற்றும் கிருஷ்ணா குமாரி ஆகியோரது மகளான சித்த மருத்துவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் பழகி வந்ததாக கூறப்படுகிறது.
பொறியாளர் கவின், தனது தாய் மற்றும் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு உடல்நிலை சரியில்லாத போதெல்லாம் சித்த மருத்துவர் ஆன தனது தோழி வேலை பார்க்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவம் பார்த்து வந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சம்பவம் நடந்த ஜூலை 27ஆம் தேதி பிற்பகல் கவின் மற்றும் அவரது தாய் ஆகியோர் உடல்நிலை சரியில்லாத தனது தாத்தாவை மருத்துவம் பார்ப்பதற்காக தனது தோழியின் சித்த மருத்துவ நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது அங்கே வந்த சித்த மருத்துவரின் தம்பி சுர்ஜித் என்பவர் கவினிடம் தனியாக பேச வேண்டுமென அழைத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து கவின் மற்றும் சுர்ஜித் ஆகியோர் பேசிக்கொண்டிருக்கும் போது தனது சகோதரியுடன் ஆன பழக்கத்தை நிறுத்தி விட வேண்டும் என்று மிரட்டியுள்ளார் அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது . இதில் சுர்ஜித் தான் மறைத்து வைத்திருந்த அருவாளால் கவினை கொடூரமாக வெட்டி ஆணவ கொலை செய்திருக்கிறார்.
வெட்டுவதற்கு முன்பு, கவினின் கண்களில் மிளகாய் பொடியை தூவியதாக கூறப்படுகிறது. சுர்ஜித், பின்னர் காவல் துறையில் வேலை பார்க்கும் தனது பெற்றோர் துணையுடன் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சரணடைந்தார். இந்த சம்பவம் தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கவினின் கொலை வழக்கு, தற்போது சிபி, சிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இது, கவின் வழக்கில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. கைதான சுர்ஜித்தின் காவல்துறை பெற்றோர் இருவரும் தங்கள் பணிகளில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அவர்களை கைது செய்யாமல், கவினின் உடலை வாங்க மாட்டோம் என்று அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் போராடி வருகின்றனர்.
கவின், ஆணவப்படுகொலை செய்யப்பட்டார் என்பதை இன்னும் தமிழ்நாட்டின் பெரிய அரசியல் கட்சிகள் எதுவும் எடுத்து பேசாமல் இருப்பது, மக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருக்கும் ஒரு பிரபல தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் கவினுக்கு பெரிய நட்பு வட்டம் இருந்துள்ளது. பொறியாளர் பட்டப்படிப்பு படித்திருக்கும் இவருக்கு வேலை பார்க்கும் இடத்தில் வருடத்திற்கு ரூ.12 லட்சம் சம்பளம் வாங்கியிருக்கிறார். மாதம் ரூ.1 லட்சத்திற்கும் மேல் சம்பளம் என்று கூறப்படுகிறது. பெற்றோருக்கு செல்ல மகனாகவும் இருந்துள்ளார். பெற்றோர் இருவருமே அரசு வேலையில் இருப்பவர்கள் என்றும் கூறப்படுகிறது.
அடிக்கடி நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடும் டர்ஃபிற்கு சென்று விளையாடி வந்துள்ளார். அனைவரையும் பாேல அவரும் சகஜமான வாழ்க்கையைத்தான் வாழ்ந்து வந்திருக்கிறார். ஒருவன், தன் வீட்டுப்பெண்ணுடன் பேசுகிறான், பழகுகிறான் என்கிற காரணத்திற்காக 24 வயதே ஆன சுர்ஜித், கவினை அரிவாளால் வெட்டி எறிந்தது, எதிர்கால சமூகத்திற்கு அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது.
கவின் குறித்து அவரது நண்பர்கள் சிலரும் சமூக வலைதளங்களில் பல காணொளிகளையும், அவருடன் இருந்த தருணங்களையும் பதிவிட்டு வருகின்றனர். 2025ஆம் ஆண்டிலும் பட்டியலினத்தில் பிறந்த ஒரே காரணத்திற்காக, ஒரு அப்பாவி உயிர் பறிபோயிருப்பது கொடுமையின் உச்சம் என்று சமூக வலைதளத்தில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



