பிரதமர் பற்றி முகநூலில் போலித் தகவல்- சந்தேகப் பேர்வழியிடம் விசாரணை!
- Muthu Kumar
- 07 Nov, 2025
கோலாலம்பூர், நவ. 7-
அமெரிக்காவுடனான வர்த்தக உடன்பாட்டில் குறைபாடுகள் இருப்பதை ஒப்புக் கொள்வதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை மேற்கோள்காட்டி போலியான பதிவொன்று முகநூல் பக்கத்தில் வெளியாகியிருந்தது. மலாய் நாளிதழொன்றின் முகப்புப் பக்கத்தில் தலைப்புச் செய்தியாக அது வடிவமைக்கப்பட்டு முகநூல் பக்கத்தில் அது பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
அந்தப் போலிச் செய்தி குறித்து மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (எம்சிஎம்சி) விசாரணை நடத்தி வருகிறது.
“உத்துசான் மலேசியா" பத்திரிகையின் இலச்சினையோடு வெளிவந்துள்ள அச்செய்தி முற்றிலும் போலியானது என்பதோடு பொ-துமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதும் ஆகும் என்று எம்சிஎம்சி குறிப்பிட்டது.
அதுபோன்ற தலைப்பில் தாங்கள் செய்தி எதனையும் வெளியிடவில்லை என்று உத்துசான் மலேசியா விளக்கியுள்ளது. சந்தேகப் பேர்வழியிடமிருந்து அலோர்காஜா போலீஸ் நிலையத்தில் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டு உள்ளது. அவருடைய கைப்பேசியும் அதன் சிம் அட்டையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று நேற்று வெளியிட்ட அறிக்கையொன்றில் எம்சிஎம்சி கூறியது.
போலியான உள்ளடக்கத்தைப் பகிர்வது பத்திரிகையின் நம்பகத்தன்மையைப் பாதிக்கும். சட்ட நடவடிக்கைக்கும் வழிகோலக்கூடும் என்று அது தெரிவித்தது.குறிப்பாக, நாளிதழ் நிறுவனங்களின் இலச்சினைகளுடன் கூடிய தகவல்களை வெளியிடும்போது சமூக ஊடகங்கள் அவற்றின் நம்பகத்தன்மையை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் ' அது அறிவுறுத்தியது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



