எய்ட்ஸ் நோய் தொற்றியிருப்பதாக தகவல்- வெ.1 கோடி இழப்பீடு கோருகிறார் ஸக்கீர்!
- Muthu Kumar
- 09 Oct, 2025
கோலாலம்பூர், அக். 9-
எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் நோயினால் தாம் பீடிக்கப்பட்டிருப்பதாகச் செய்தி வெளியிட்ட இந்தியாவைத் தளமாகக் கொண்டு செயல்படும் இணையப் பத்திரிகை ஒன்றிடமிருந்தும் அதன் செய்தியாளர் ஒருவரிடமிருந்தும் ஒரு கோடி வெள்ளியை இழப்பீடாகக் கோரியிருக்கிறார் டாக்டர் ஸக்கீர் நாயக்.
தம்மைப் பற்றிய அச்செய்தி அவதூறானது என்பதோடு தமது நற்பெயருக்கும் கண்ணியத்திற்கும் அது களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தமது கோரிக்கை மனுவில் ஸக்கீர் குறிப்பிட்டுள்ளார்.தமக்கு எச்ஐவி கிருமிகள் தொற்றியிருப்பது போன்றும் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்டதால்தான் அவ்வாறு நிகழ்ந்துள்ளது என்பது போன்றும் அச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது என்று பிரபல மதப் போதகரான ஸக்கீர் கூறியுள்ளார்.
செப்டம்பர் 13ஆம் தேதியன்று யூடியூப் தளத்தில் அச்செய்தி வெளியாகியிருந்தது.
“இப்போதே பாருங்கள்: சர்ச்சைக்குரிய மதப் போதகர் ஸக்கீர் நாயக் மருத்துவமனையில் அனுமதி, கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு ஆளாகியுள்ளார்" எனும்
தலைப்பில் வெளியான அச்செய்தியால் தாம் ஏளனத்திற்கு ஆளாகியிருப்பதாகவும் ஸக்கீர் கூறிக் கொண்டார்.அக்பர்தீன் அண்ட் கோ சட்ட நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அக்கோரிக்கை மனுவில் சிஎன்என் நியூஸ் 18 இந்தியா மற்றும் மனோஜ் குப்தா ஆகிய தரப்புகள் பெயர்குறிப்பிடப்பட்டுள்ளன.
கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தாம் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது. அது மதப் போதகராக இருக்கும் தமது மரியாதையைப் பங்கப்படுத்தியுள்ளது என்றும் ஸக்கீர் கூறியுள்ளார். சம்பந்தப்பட்ட தரப்பினர் தமக்கு இழப்பீடு வழங்குவதோடு மட்டுமல்லாது. மன்னிப்பும் கேட்க வேண்டும். அத்துடன் அவதூறான அறிக்கைகளை மீட்டுக் கொள்ள வேண்டும். ஏழு நாட்களுக்குள் இதனைச் செய்யத் தவறினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ஸக்கீர் எச்சரித்தார்.தமக்கு எய்ட்ஸ் நோய் ஏற்பட்டிருப்பதாக சமூக ஊடகங்களில் வெளியான அச்செய்தி அபத்தமானது என்பதை மறுத்துருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



