ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு! - வரும் 22-ஆம் தேதி கணக்கில் சேர்க்கப்படும்! - கல்வி அமைச்சர்
- Shan Siva
- 19 Jan, 2026
கோலாலம்பூர், ஜன 19: பொது சேவை ஊதிய அமைப்பு, எஸ்.எஸ்.பி.ஏ-வின் இரண்டாம் கட்டத்தின் கீழ், ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும் என்று கல்வி அமைச்சர் பாட்லினா சிடெக் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பள உயர்வு வரும் வியாழக்கிழமை, ஜனவரி 22ஆம் தேதி, ஆசிரியர்களின் சம்பளக் கணக்கில் நேரடியாக சேர்க்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இரண்டாம் கட்டத்தின் படி, ஆதரவு மற்றும் மேலாண்மை–தொழில்முறை பிரிவைச் சேர்ந்த பணியாளர்களுக்கு 15 சதவீத சம்பள உயர்வும், உயர் மேலாண்மை குழுவிற்கு 7 சதவீத சம்பள உயர்வும் வழங்கப்படுகிறது.
ஜனவரி 22ஆம் தேதி ஆசிரியர்கள் சம்பள உயர்வை பெறுவார்கள் என்று, மீடியா பிரிமா நிறுவனத்தின் ஹாட் எஃப்.எம். வானொலி நிலையத்தில் அளித்த பேட்டியில் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
இந்த சம்பள உயர்வு, கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதியிலிருந்த சம்பள அடிப்படையில் கணக்கிடப்படும் என்றும் அவர் கூறினார். மேலும், கல்வி அமைச்சின் மொத்த பட்ஜெட்டில், 80 சதவீதம் பணியாளர்களின் சம்பளத்திற்கே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விளக்கினார்.
முன்னதாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், 2024 மே மாதத்தில், பொதுச் சேவை ஊதிய அமைப்பின் முதல் கட்டத்தின் கீழ், 13 சதவீதத்திற்கும் அதிகமான சம்பள உயர்வு அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் என அறிவித்திருந்தார். அந்தச் சம்பள உயர்வு, 2024 டிசம்பர் மாதத்திலிருந்து அமலுக்கு வந்தது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



