மலேசிய ஆடவருக்கு சிங்கப்பூரில் இன்று தூக்கு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப் 25: சிங்கப்பூரில் மலேசிய ஆடவரான கே.தட்சிணா மூர்த்திக்கு இன்று தூக்குத் தண்டனை நிறைவேற்றப் படவுள்ளது. இந்நிலையில் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மலேசிய மனித உரிமைகள் ஆணையம் உட்பட பொதுமக்களும் இணைந்து மெழுகுவர்த்தி ஏந்தும் போராட்டத்தை நேற்று இரவு மேற்கொண்டனர்,

இதில் கலந்துகொண்ட மனித உரிமைகள் ஆணைய வழக்கறிஞரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான என்.சுரேந்திரன், முன்னாள் பிரதமர் மகாதிர் மற்றும் இஸ்மாயில் சப்ரி இருவருக்கும் தமது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொண்டார்.

போதைப்பொருள் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்ட மலேசியர்களின் மரணதண்டனையை நிறுத்துமாறு, முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மற்றும் இஸ்மாயில் சப்ரி இருவரும் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் இதற்கு முன்னர் மேல்முறையீடு செய்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

2018 ஆம் ஆண்டில், பிரதமராக இரண்டாவது முறையாகப் பதவி வகித்தபோது, ​​பி. பிரபுவின் மரணதண்டனையை நிறுத்தி வைக்குமாறு மகாதிர் சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு கடிதம் எழுதியிருந்தார். இருப்பினும், பிரபு தூக்கிலிடப்பட்டார்.

2021 ஆம் ஆண்டில், இஸ்மாயில், சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கிற்கு கடிதம் எழுதி, “மனிதாபிமான அடிப்படையில்” கே.டி. நாகேந்திரனுக்கு கருணை காட்டுமாறு வேண்டுகோள் விடுத்தார். இருப்பினும், அடுத்த ஆண்டு நாகேந்திரன் தூக்கிலிடப்பட்டார்.

மகாதிர் மற்றும் இஸ்மாயில் செய்த மேல்முறையீடுகள் அர்த்தமுள்ளவை என்று லாயர்ஸ் ஃபார் லிபர்ட்டியின் ஆலோசகரான சுரேந்திரன் விவரித்தார்.

இது குடும்பங்களுக்கு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. தாம்அந்தக் குடும்பங்களுடன் தொடர்பில் இருந்ததால் அதை உணர்ந்துள்ளதாக சுரேந்திரன் கூறினார்.அரசாங்கம், பிரதமர்கள், அவர்களுக்காகப் பேசுவது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதலாக இருந்தது என்று அவர் கூறினார்.

44.96 கிராம் டயமார்பைனை சிங்கப்பூருக்குள் கடத்தியதற்காக தட்சிணாமூர்த்தி இன்று தூக்கிலிடப்படவுள்ளார்.

சிங்கப்பூரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு மலேசியர்களில் இவரும் ஒருவர், இந்த மாத தொடக்கத்தில் மலேசிய மனித உரிமைகள் ஆணையம் அவர்களின் மரண தண்டனையில் தலையிடுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *