மலேசிய இசைக்குழு கிரவணா வின், ‘Hola Rangoli ‘ இசை ஆல்பம் வெளியீட்டு விழா!
- Muthu Kumar
- 30 Sep, 2025
மலேசிய இசைக்குழுவான ‘கிரவணா’வின், ‘Hola Rangoli ‘ எனும் இசை ஆல்பம் வெளியீட்டு விழா மற்றும் விருந்து நிகழ்வு கடந்த 27-ஆ ஆம் தேதி சனிக்கிழமை கிள்ளான், Taman Bayu Perdana, Bayu Galaxy Ballroomமில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
தகவல் தொடர்பு அமைச்சின் ஆதரவில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஓம்ஸ் அறவாரியத் தலைவரும், மலேசிய அரிமா சங்கத்தின் தோற்றுநருமான ஓம்ஸ் பா.தியாகராஜன் மற்றும் டத்தோ முகமட் அமார் பின் அர்ணாசலம் கலந்துகொண்டு ‘Hola Rangoli ‘ இசை ஆல்பத்தை வெளியீடு செய்தனர். மேலும் தகவல் தொடர்பு அமைச்சின் பிரதிநிதிகள் உட்பட பல முக்கிய பிரமுகர்கள், இசை நிபுணர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
மலேசிய இசைத்திறமைகள் மற்றும் படைப்பாற்றலின் உன்னதங்களுக்கு ஒரு சமர்ப்பணமாக வித்தியாசமான முறையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மிக நேர்த்தியான முறையில் நிகழ்வின் ஒவ்வொரு அங்கத்தையும் கட்டமைத்து மெய் சிலிர்க்க வைத்தனர் கிரவணா குழுவினர்.உலகத் தரத்தில் ஓர் ஆல்பம் வெளியீட்டு விழா எனப் பெருமையாகச் சொல்லும் அளவுக்கு, பிரமாண்டம் காட்டியது விழா.
கிரவணா குழுவினரின் உற்சாகம், அரங்கம் நிறைந்த கூட்டம், சிறப்பு விருந்தினர்களின் மகிழ்ச்சி ஆரவாரம் என இந்த ஆல்பம் விழா அனைவரையும் அசத்தியது.15 பாடல்கள் அடங்கிய ஹோலா ரங்கோலி ஆல்பத்தை அறப்பணி வேந்தர் ஓம்ஸ் பா.தியாகராஜன் மற்றும் டத்தோ டாக்டர் முகமட் அமார் பின் அர்னாசலம் இருவரும் இணைந்து முரசறைந்து அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர்.
கிரவணா குழுவினரின் பாடல்கள் தொடர்ந்து மேடையை அலங்கரித்து, ஆர்ப்பரித்து, அட்டகாசம் செய்தன. வந்திருந்தவர்களின் உற்சாகத்திற்கு வற்றாது தீனி போட்டு தங்கள் அதிர் குரலால் அதிசயக்க வைத்தனர் கிரவணா குழுவினர். விதவிதமான பாடல்கள், ரசிக்கும் படியான பாடல் வரிகள், குதூகலிக்கும் இசை என தனி முத்திரையோடு இருந்தன அவர்களின் படைப்புகள்.
நிகழ்ச்சித் தொகுப்பாளர் அன்புள்ள மாறன் இடையிடையே பாடல்கள் குறித்தும், பாடகர்கள், இசை குறித்தும் தன் அனுபவத்தோடு கலந்து பேசிய அனைவரையும் கவர்ந்தார். மலேசியக் கலைஞர்களின் அபாரத் திறமைக்கு அவரின் ஒவ்வொரு சொல்லும் நெகிழ்ச்சியோடு நன்றி சொல்லியது. தன் சக கலைஞர்களுக்கு மனமார அவர் வாழ்த்துகளைச் சொல்லிக்கொண்டே இருந்தார்.
நிகழ்வில் பேசிய ஓம்ஸ் பா.தியாகராஜன் நமது நாட்டுக் கலைஞர்களின் இந்தப் பிரமாண்ட பங்களிப்பு வியக்க வைப்பதாகத் தெரிவித்தார்.அரசாங்க அமைச்சிடம் இருந்து இது போன்ற ஆல்பம் நிகழ்ச்சிக்கெல்லாம் அனுமதி கிடைப்பதென்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அதைச் சாதித்திருக்கிறார்கள் இந்த கிரவணா குழுவினர். அதற்காக அவர்களுக்குப் பாராட்டுகள். அனுமதி வழங்கி வருகை தந்திருக்கும் தகவல் தொடர்பு அமைச்சுக்கும் நன்றிகள் எனக் கூறினார்.
நம் பிள்ளைகள் எவ்வளவு திறமை சாலிகளாக இருக்கிறார்கள். வெளிநாட்டுப் பாடகர்களை விட நம் பிள்ளைகள் இங்கு திறமையோடு இருக்கிறார்கள். அதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்று. இதுபோன்ற திறமையான உள்நாட்டுக் கலைஞர்களை நம் ஊக்குவிக்க வேண்டும். இதுபோன்று மேலும் மேலும் பல விழாக்களை நம் பிள்ளைகள் நடத்தி வெற்றி பெற வேண்டும்.
கிரவணா குழுவின் இந்த வெற்றிக்கு உண்மையான காரணம், அவர்கள் அனைவரும் ஒற்றுமையாய் இருப்பதுதான். அதை இங்கு உணர முடிகிறது. ஒற்றுமையும், அவர்கள் மத்தியிலான ஒருமித்த கருத்திணக்கமும்தான் இந்த வெற்றிக்கு காரணம். அந்தக் குழுவிற்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என அவர் கூறினார்.
மேலும், உலகம் முழுக்க இவர்கள் பெயர் பெற்றிருக்கிறார்கள். இன்னும் மென்மேலும் சிறப்புகள் பெற வேண்டும். அவர்களுக்கு உதவ தயாராக இருக்கிறேன் என ஓம்ஸ் பா.தியாகராஜன் கூறினார். மேலும் ஆல்பத்தை வெளியிட்டதோடு, முதல் நபராக அந்த ஆல்பத்தை 10 ஆயிரம் வெள்ளி கொடுத்துப் பெற்றுக்கொண்டார்.
நிகழ்வின் மற்றொரு சிறப்பு விருந்தினர் டத்தோ டாக்டர் முகமட் அமார் பின் அர்னாசலம் 5 ஆயிரம் வெள்ளி கொடுத்து, ஆல்பத்தைப் பெற்றுக்கொண்டார்.K6 பிரதர்ஸ் அருண்குமார் மாரியப்பன் & ரமேஷ் கெண்டே 6 ஆயிரம் ரிங்கிட் வழங்கி ஆல்பத்தைப் பெற்றுக்கொண்டனர்.
நிகழ்விற்கு சிறப்பு வருகை புரிந்த துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அமாட் ஜாஹிட் ஹமிடியின் இந்தியர் பிரிவு சிறப்பு அதிகாரி அர்விந்த்ன் அப்பளசாமி 10 ஆயிரம் ரிங்கிட் வழங்கி ஆல்பத்தைப் பெற்றுக்கொண்டதோடு, புதிதாக திறன் மிக்க நம் இந்திய இளைஞர்கள் ஆல்பம் செய்யும் எண்ணம் கொண்டிருந்தால், தனிப்பாடல் பாட இலக்கு வைத்திருந்தால் இந்த கிரவணா ஸ்டூடியோவுடன் இணைந்து தாராளமாக அதை மேற்கொள்ளலாம் என்றும், அதற்கும் 10 ஆயிரம் வெள்ளியை தாம் வழங்கத் தயாராக இருப்பதாகவும் அறிவித்தார்.
திறன் மிக்க நம் இளைஞர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கான வழியை நாம்தான் காட்ட வேண்டும். நம் இளைஞர்களுக்காக ஆலோசனைகளை வழங்க தயாராகவே இருக்கிறேன் என்று அவர் கூறினார்.ஒட்டு மொத்தத்தில் எல்லாரையும் ஈர்க்கும் விதமாக ஆக்கப்பூர்வமான ஓர் ஆல்பம் வெளியீடாக இந்நிகழ்வு அமைந்தது.
அழகாக வடிவமைக்கப்பட்ட பெட்டியில் ஹோலா ரங்கோலி எனும் நம் கலைஞர்களின் அசாத்திய உழைப்பு பென் டிரைவ் வடிவில் விநியோகம் செய்யப்பட்டது.
நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் ஆல்பத்தை வாங்கி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.நாமும் கொண்டாடுவோம் நம் உள்ளூர் கலைஞர்களை.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



