இஸ்ரேலுக்கு மலேசியா கடும் கண்டனம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜன 1: காசாவில் உள்ள ஏராளமான சர்வதேச மனிதாபிமான உதவி அமைப்புகளின் செயல்பாடுகளைத் தடை செய்து இடைநிறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இஸ்ரேலிய ஆட்சியின் முடிவை மலேசியா கடுமையாகக் கண்டிப்பதாக மலேசிய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நடவடிக்கை சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் தெளிவான மீறலாகும் என்றும், பாலஸ்தீனப் பிரதேச மக்களுக்கு எதிராக இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக  நடத்தி வரும் போரை அடுத்து ஏற்கனவே ஏற்பட்டுள்ள மோசமான மனிதாபிமான நெருக்கடியை மேலும் மோசமாக்கும் என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது

மனிதாபிமான உதவிகளைத் தடுப்பது பொதுமக்களுக்கு கூட்டுத் தண்டனையை அளிக்கிறது.

நான்காவது ஜெனீவா மாநாட்டின் கீழ், காசாவிற்கு மனிதாபிமான அணுகலைத் தடையின்றி உறுதி செய்வதற்கு இஸ்ரேலிய ஆட்சி சட்டப்பூர்வமாகக் கடமைப்பட்டுள்ளது என்று அமைச்சு இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் தனது முடிவை உடனடியாக ரத்து செய்து, மனிதாபிமான உதவிகளை முழுமையாகவும் தடையின்றியும் வழங்குவதை உறுதி செய்ய சர்வதேச சமூகத்தை மலேசியா தீர்க்கமாகச் செயல்படுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.  தவறினால் சர்வதேச சட்ட மீறல்களுக்கு அது பொறுப்பேற்க வேண்டும் என்று விஸ்மா புத்ரா தெரிவித்துள்ளது.

மலேசியா பாலஸ்தீன மக்களுடனான தனது அசைக்க முடியாத ஒற்றுமையை மீண்டும் உறுதிப்படுத்தியதுடன், இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், காசா மீதான முற்றுகையை நீக்கவும், 1967க்கு முந்தைய எல்லைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட பாலஸ்தீன அரசை நிறுவவும் தொடர்ந்து வாதிடும் என்றும் கூறியது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *