கரூரில் இறந்தவர்கள் வீட்டுக்கு சென்ற கமல்.

top-news
FREE WEBSITE AD

தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்தில் சிக்கி கரூரில் அப்பாவி மக்கள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் சென்ற மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது முதலமைச்சர், செந்தில் பாலாஜி, காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்த கமல், விஜய் இனி தலைவராக செய்ய வேண்டியதை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுப்பதாக கூறியுள்ளார்.

செப்டம்பர் 27 ஆம் தேதி விஜய் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் பயணம் செய்தார். கரூரில் திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். தவெக தலைவர் விஜய்யை தவிர பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், ராஜ்யசபா எம்பியுமான கமல்ஹாசன் இன்று கரூர் கூட்ட நெரிசலில் பாதித்த மக்கள், உயிரிழந்தோர் குடும்பங்களை நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த கமல், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் காரில் கரூர் சென்றார். சம்பவம் நடைபெற்ற இடம், மக்களைச் சந்தித்து அவர் ஆறுதல் தெரிவித்தார்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், "இனிமேல் இப்படி ஒரு சம்பவம் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலத்தின் அருகே அனுமதி கொடுத்திருந்தால் இன்னும் மோசமான விளைவுகள் ஏற்பட்டிருக்கும். அந்த இடத்தில் அனுமதி கொடுக்காமல் இருந்ததற்கு நன்றி தான் தெரிவிக்க வேண்டும். முதலமைச்சர் பண்பான தலைவராக இந்த விஷயத்தில் நடந்திருப்பது பெருமையாக உள்ளது.

நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருப்பதால், இதைப்பற்றி அதிகம் பேச முடியாது. காவல்துறைக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும். நானும் அப்படி வந்துள்ளேன். அவர்கள் கடமையை அவர்கள் செய்கிறார்கள். செந்தில் பாலாஜிக்கும் நன்றி சொல்ல வேண்டும். ஏன் வந்தார் என கேட்பதை விட, வந்தார் என்பது முக்கியம். அது அவரின் பகுதி. அவர் வீடு இருக்கும் பகுதி. அவர் ஊர்.. அவர் மக்கள்.

அவர் தேடி வராமல் வேறு யார் வருவார்கள். எண்ணிக்கை பார்க்காதீர்கள்.பாதிக்கப்பட்டவர்களின் நிலையை தான் பார்க்க வேண்டும். எல்லாரும் மனிதர்கள்தான். வேறு சதித்திட்டத்தை பற்றி பேச இது நேரமில்லை. குற்றச்சாட்டை யார் வேண்டுமானாலும் செய்யலாம். நடுநிலையாக யோசிக்க வேண்டும். முக்கியமாக மக்களுடன் இருந்து யோசிக்க வேண்டும். மக்களுக்கு நீதி கிடைப்பதற்கும், ஆறுதல் சொல்வதற்காகவும் தான் நாங்கள் வந்துள்ளோம்.

மேற்கோண்டு உயிர் சேதம் ஏற்படுத்தாமல் காப்பாற்றிய பாலாஜிக்கு நன்றி. இந்த விஷயத்தை நீதிமன்றம் பார்த்துக் கொள்ளும். விஜய்க்கு நீதிமன்றம் அறிவுரை சொல்லும். இனி இப்படி ஒரு சம்பவம் நடக்காமல் இருக்க அனைத்துக் கட்சிகளுக்கும் அழுத்தமான சட்டத்தை, நாட்டுக்கே முன் உதாரணமாக கொண்டு வர வேண்டும். தமிழ்நாடு மீண்டு எழ வேண்டும். அனைவரும் சட்டத்திற்குட்பட்டு நடந்து கொள்ள வேண்டும். சட்டமும், நீதியும் ஒன்றாக அமைய வேண்டும். அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும்.

நான் மனிதம் பேசுகிறேன். எல்லா கட்சிகளும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். எவ்வளவு ஆறுதல் சொன்னாலும் போன உயிர் திருப்பிக் கொடுக்க முடியுமா. பணம் எவ்வளவு கொடுத்தோம் என்ற போட்டி வேண்டாம். இனி விஜய் ஒரு தலைவராக செய்ய வேண்டியதை செய்ய வேண்டும். மற்றபடி அவரிடம் அறிவுரை சொல்ல எதுவுமில்லை. அவர்கள் குற்றம் சாட்டும் செந்தில் பாலாஜி இங்கே இருக்கிறார். குற்றம் சாட்டும் நபர்கள் எங்கே உள்ளார்கள்." என்று கேள்வி எழுப்பினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *