ஜம்மு காஷ்மீர்: ஸ்ரீநகர் போலீஸ் ஸ்டேஷனில் வெடிகுண்டு விபத்து - 9 பேர் பலி!
- Muthu Kumar
- 15 Nov, 2025
ஸ்ரீநகரில் உள்ள நவ்காம் போலீஸ் நிலையத்தில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையின் போது பிடிபட்ட வெடிகுண்டுகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன.அந்த வெடிகுண்டுகளை போலீஸாரும், தடயவியல் நிபுணர்களும், தாசில்தாரும் ஆய்வு செய்து கொண்டிருந்தபோது திடீரென வெடித்துச் சிதறியது.
இந்த வெடிவிபத்தில் சிக்கி போலீஸார் மற்றும் தடயவியல் அதிகாரிகள் என 9 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் போலீஸ் நிலைய கட்டிடம் முற்றிலும் சேதமடைந்தது. இதில் தாசில்தாரும் உயிரிழந்தார். வெடிவிபத்து சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும், தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சம்பவத்தில் 29 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். போலீஸ் நிலைய வளாகத்தில் பொருத்தப்பட்டு இருந்த வாகனங்களும் மோசமாக சேதம் அடைந்தன.
வெடிகுண்டு சம்பவம் அருகில் இருந்த கட்டிடத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
போலீஸ் நிலையத்திற்கு பக்கத்தில் இருந்த வீடுகளின் ஜன்னல்களில் இருந்த கண்ணாடிகள் கூட வெடிகுண்டு சத்தத்தில் உடைந்து சேதம் அடைந்தன. மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுவிட்டதோ என்று நாங்கள் நினைத்ததாக அருகில் வசித்த மக்கள் தெரிவித்தனர்.
சமீபத்தில் டெல்லியில் கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடப்பதற்கு முன்பு 3000 கிலோ வெடிமருந்துகளை காஷ்மீர் போலீஸார் பறிமுதல் செய்திருந்தனர். அதனை போலீஸ் நிலையத்தில் சேமித்து வைத்திருந்தனர். அதுதான் இப்போது வெடித்து சிதறி இருக்கிறது.
நவ்காம் போலீஸ் நிலையம் தான் சமீபத்தில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதலுக்கு திட்டமிட்டதை கண்டுபிடித்தது. ஸ்ரீநகர் பகுதியில் ஜெய்ஸ் இ முகமத் போஸ்டர்களை பார்த்து நவ்காம் போலீஸ் நிலையம் அது குறித்து விசாரித்து அதனை ஒட்டிய டாக்டர் அடில் என்பவரை கைது செய்தது.
அதனை தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியதில் ஹரியானாவில் உள்ள பரிதாபாத் மருத்துவ கல்லூரியில் பணியாற்றி வந்த முஜாமில் சகீல் என்ற டாக்டரும் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தி 3 ஆயிரம் கிலோ வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



