மலேசியர்களுக்குத்தான் நான் பிரதமர் அந்நியர்களுக்கு அல்ல!
- Muthu Kumar
- 28 Jul, 2025
மூவார், ஜூலை 28-
மலேசியர்களுக்குத்தான் நான் பிரதமர். வெளிநாட்டினருக்கு அல்ல என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று தெரிவித்தார். மலேசியர்களுக்குக் குறைவான விலையிலும் வெளிநாட்டினருக்கு சந்தை விலையிலும் பெட்ரோலை விற்பனை செய்யும் அரசாங்கத்தின் முடிவைத் தற்காத்துப் பேசுகையில் அன்வார் இவ்வாறு குறிப்பிட்டார்.
வெளிநாட்டினரும் நமது நாட்டுக்குப் பங்களிப்பு செய்து வருவதால், அவர்களுக்கும் குறைந்த விலையில் பெட்ரோலை வழங்க வேண்டும். அந்நியர்களிடம் பாரபட்சம் காட்டக் கூடாது என்று சில தரப்பினர் வாதிட்டு வருகின்றனர். அத்தரப்பினருக்குப் பதிலளிக்கும் வகையில் அன்வார் இவ்வாறு குறிப்பிட்டார்.
வெளிநாட்டினர் நமக்கு வருமானவரி செலுத்துவதில்லை. உள்ளூர் மக்கள் அனுபவித்துவரும் அதே சலுகைளை வெளிநாட்டினரும் அனுபவிக்க எந்தவொரு நாடும் அனுமதித்திருப்பதாகத் தெரியவில்லை என்றார் அவர்.
ஜொகூரின் மூவாரில் தேசிய தின மாதத்தைத் தொடக்கி வைத்து உரையாற்றியபோது அவர் குறிப்பிட்டார். ஒரு லிட்டர் ரோன்95 பெட்ரோலின் விலை தற்போது 2.05 வெள்ளியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அது ஆறு காசுகள் குறைக்கப்பட்டு 1.99 வெள்ளியாக விற்கப்படவுள்ளது. சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது குறைவாகும் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
வெளிநாட்டினர் 2.50வெள்ளிக்கும் 2.60 வெள்ளிக்கும் இடையில் பெட்ரோலை வாங்கிக் கொள்ள முடியும் என்று குறிப்பிட்ட அவர், நாட்டின் வளங்களை சுயநலத்திற்காகவும் தங்களின் குடும்பத்தினருக்கும் சுரண்டும் தலைவர்களை மக்கள் தேர்ந்தெடுக்கக் கூடாது என்று வலியுறுத்தினார்.
ஒரு தலைவரின் பிள்ளை 120 கோடி வெள்ளியை வைத்துள்ளார். அதே வேளையில், மற்றொரு குடும்ப உறுப்பினர் 400 கோடி வெள்ளியை வைத்திருக்கிறார் என்றும் அன்வார் குறிப்பிட்டார்.
பழைய தலைவர்களை பழிவாங்க விரும்பவில்லை. அபகரித்த பணத்தை திரும்ப ஒப்படையுங்கள் என்றுதான் கேட்டுக் கொள்கிறேன். இருநூறு கோடி வெள்ளியை வைத்திருந்தால், அதில் 150 கோடி வெள்ளியையாவது திரும்ப ஒப்படையுங்கள். அதனை விடுத்து என்னைப் பதவி விலகும்படி கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்காதீர்கள் என்றார் அன்வார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



