40 ஆண்டுகளில் முதல் முறையாக பனாமா கடற்கரையில் நடந்த மாற்றம்!

top-news
FREE WEBSITE AD

பனாமா நாட்டின் பசிபிக் கடற்கரைப் பகுதியில், டிசம்பர் முதல் ஏப்ரல் வரை பொதுவாக வர்த்தக காற்றுகள்பலமாக வீசும்.இந்த காற்றுகள் 'கோஸ்டர் அப்வெல்லிங்'  (கடலின் ஆழமான பகுதியிலிருந்து குளிர்ந்த, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த நீர், மேற்பரப்புக்கு மேலே எழும்பும் ஒரு இயற்கை நிகழ்வாகும்) எனப்படும் சக்திவாய்ந்த இயற்கை செயல்முறையை தூண்டுகின்றன.

காற்றுகள் கடற்கரைக்கு இணையாக வீசும் போது, மேற்பரப்பில் உள்ள சூடான நீர் நகர்ந்து செல்கிறது. இதனால், ஆழ்கடலில் இருக்கும் குளிர்ந்ததும் சத்துகள் நிறைந்ததுமான நீர் மேலே எழும்பி வருகிறது. இந்த செயல்முறை கடல் உயிரினங்களுக்கு முக்கிய ஊட்டச்சத்து ஆதாரமாக விளங்குகிறது. கண்களுக்கு புலப்படாத இந்த நீர்சுழற்சி பல தசாப்தங்களாக பனாமா வளைகுடா பகுதியில் உயிரியல் சமநிலையை வடிவமைத்து வருகிறது.

இது phytoplankton எனப்படும் நுண்ணுயிர் பாசிகளை பெருக்க உதவுகிறது. அந்த நுண்ணுயிர்களே மீன்கள் மற்றும் சிறிய கடல் உயிரினங்களுக்கும், அவற்றை வேட்டையாடும் பெரிய உயிரினங்களுக்கும் ஆதாரமாக இருக்கின்றன.மேலும், இந்த செயல்முறை இயற்கையான 'ஏர் கண்டிஷனர்' போல செயல்படுகிறது.

அதிக வெப்பமான மாதங்களில், ஆழத்திலிருந்து மேலே வரும் குளிர்ந்த நீர், ஆழம் குறைந்த பவளப்பாறைகளை குளிர்வித்து பாதுகாக்கிறது. இதன் மூலம் கடல் சூழல் அமைப்பின் நிலைத்தன்மை உறுதி செய்யப்படுகிறது. ஆனால், 2025-ஆம் ஆண்டு இந்த இயற்கை எஞ்சின் திடீரென நின்றது. இதனால் விஞ்ஞானிகள் அதிர்ச்சியடைந்தனர். கடலின் மேற்பரப்பு வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்த நிலையில் இருந்தது. அதுமட்டுமல்லாமல் சத்துக்கள் நிறைந்த நீர் ஆழத்தில் சிக்கிக் கொண்டு இருந்தது.

அப்வெல்லிங் ஒரே நேரத்தில் மூன்று முக்கிய செயல்களைச் செய்கிறது. அதாவது, மீன் உற்பத்தியை அதிகரிக்கிறது, கடற்கரை நீரை குளிர்விக்கிறது, வறட்சி காலத்தில் உள்ளூர் மைக்ரோ காலநிலையை வடிவமைக்கிறது. குறைந்தது நான்கு தசாப்தங்களாக, செயற்கைக்கோள் பதிவுகளும் ஆய்வு கப்பல் தரவுகளும் ஒரே மாதிரியான பருவச் சுழற்சியை காட்டியதாக கூறப்படுகிறது.

ஒவ்வொரு வறட்சி காலத்திலும் கடல் மேற்பரப்பு வெப்பநிலை தொடர்ந்து குறையும். ஆனால், 2025- ஆம் ஆண்டு ஏற்பட்ட இந்த மாற்றம் வானிலைக் காரணிகளுடன் தொடர்புடையதாக கண்டறியப்பட்டு உள்ளது. மேம்பட்ட கடல் மற்றும் வானிலை சென்சார் பொருத்தப்பட்ட ஆய்வு கப்பல் S/Y Eugen Seibold சேகரித்த அளவீடுகள், ஆண்டின் தொடக்கத்திலேயே வழக்கமாக வலுவாக வீசும் வடக்கு வர்த்தக காற்றுகள் (northerly trade winds) பலவீனமடைந்து சீரற்றதாக மாறியிருந்ததை வெளிப்படுத்தின.

சாதாரணமாக இக்காற்றுகளே கடற்கரைக்கு இணையாக வீசி, ஆழத்திலிருந்து சத்துகள் நிறைந்த குளிர்ந்த நீரை மேலே எழும்பச் செய்யும். ஆனால் அவை தளர்ந்ததால் அப்வெல்லிங் செயல்முறை பாதிக்கப்பட்டது. இதுவே 2025-ஆம் ஆண்டில் கடல் சூழல் அமைப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றத்திற்கான முக்கிய காரணமாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *