மகார் பெஸ்ட் XL நிகழ்ச்சியில் ஆண் - பெண் உல்லாசம்! - விதிமுறைகளை மீறிய ஏற்பாட்டாளர் மீது நடவடிக்கை!
- Shan Siva
- 04 Feb, 2026
கோலாலம்பூர், பிப் 4:
கோத்தா பாருவில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற மகார் பெஸ்ட் XL நிகழ்ச்சியில் விதிமுறைகள் மீறப்பட்டதைத் தொடர்ந்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளரிடமிருந்து RM8,000 பாதுகாப்பு வைப்பு தொகையை கிளந்தான் மாநில அரசு பறிமுதல்
செய்துள்ளது.
மாநில உள்ளாட்சி, வீடமைப்பு,
சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறை எக்ஸிக்யூட்டிவ்
கவுன்சிலர் ஹில்மி அப்துல்லா, நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு அதிகபட்சமாக
RM30,000 அபராதம் விதிக்கப்படலாம் என்றும்,
அதை செலுத்தத் தவறினால் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படலாம்
என்றும் தெரிவித்தார்.
கோத்தா பாருவில் உள்ள ஒரு வணிக
வளாகத்தின் கார் நிறுத்துமிடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மேடை நிகழ்ச்சியின் போது சிலர் குதித்து நடனமாடும் 40 விநாடி வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து விசாரணை
நடத்தப்பட்டது.
ஜனவரி 29 முதல்
31 வரை நடைபெற்ற இந்த உணவு மற்றும் விற்பனை
விழாவுக்கு, 2025 கிளந்தான் பொழுதுபோக்கு மற்றும்
பொழுதுபோக்கு அரங்குகள் கட்டுப்பாடு சட்டத்தின் கீழ், கோத்தா
பாரு நகராட்சியிடமிருந்து அனுமதி வழங்கப்பட்டிருந்ததாக ஹில்மி கூறினார்.
ஆனால், நிகழ்ச்சியின்
இறுதிநாளில் இரவு 10.30 மணியளவில் மாஸ்டோ இசைக்குழுவின் நிகழ்ச்சியின்போது விதிமுறைகள் மீறப்பட்டதாக
அவர் தெரிவித்தார். பார்வையாளர்களை தூண்டிய சிலரை அதிகாரிகள் வெளியேற்றினாலும்,
கூட்டத்தை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை என்றும்
கூறினார்.
மேலும், கூட்டத்தை
கட்டுப்படுத்த நிகழ்ச்சியை நிறுத்தாததும், போதிய
பாதுகாப்பின்றி ஆண்கள்–பெண்கள் உல்லாசத்தை அனுமதித்ததும் ஏற்பாட்டாளரின்
கவனக்குறைவாக கருதப்பட்டதாக ஹில்மி விளக்கினார்.
இந்தச் செயல்கள், 2025 கிளந்தான் பொழுதுபோக்கு சட்டத்தின் பிரிவு 13(1) மற்றும் உரிம நிபந்தனைகளை மீறியதாகும் என்றும் அவர் கூறினார்.
சிறு வியாபாரிகளுக்கு வருமானம் தரும்
உணவு விழாக்களை அரசு ஆதரிப்பதாகவும், கிளந்தானை
சுற்றுலா தலமாக மேம்படுத்தும் முயற்சிகளுக்கு துணை நிற்பதாகவும் தெரிவித்த ஹில்மி,
விதிமுறைகளை பின்பற்றுவது கட்டாயம் என்றும் வலியுறுத்தினார்.
எதிர்கால நிகழ்ச்சிகள் அனைத்தும் நிர்ணயிக்கப்பட்ட
விதிமுறைகளையும் வழிகாட்டுதல்களையும் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



