தமிழகத்திலேயே முதல் முறையாக வியக்க வைக்கும் பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையம்!
- Muthu Kumar
- 18 Jul, 2025
திருச்சி மாநகர போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணவும் எதிர்கால தேவையை கருத்தில் கொண்டும் பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி பன்னாட்டு விமான நிலையத்திற்கு நிகராக அனைத்து நவீன வசதிகளையும் கொண்ட மிகப் பெரிய பேருந்து முனையமாக சுமார் 38 ஏக்கர் பரப்பளவில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் 408.36 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. தரைத்தளத்தில் 345 வெளியூர் பேருந்துகளும், முதல் தளத்தில் 56 உள்ளூர் நகர பேருந்துகள் என மொத்தம் 401 பேருந்துகள் ஒரே சமயத்தில் நிறுத்துவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
முத்தமிழர் கலைஞர் கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையம் என பெயரிடப்பட்டுள்ள இந்த முனையத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த மே மாதம் திறந்து வைத்தாலும் பயன்பாட்டுக்கு வரவில்லை. இறுதிக்கட்ட பணிகளின் நிலுவை, பராமரிப்பு மற்றும் இயக்குதல் பணியை தனியாருக்கு வழங்கும் ஏற்பாடுகள் காரணமாக தாமதமாகி வந்தது. இப்படியான நிலையில் அனைத்து பணிகளும் நிறைவடைந்து சமீபத்தில் இந்த பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
தமிழ்நாட்டின் போக்குவரத்து கட்ட அமைப்பில் புதிய முக்கிய முகமாக முத்தமிழறிஞர் கலைஞர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் இது தமிழ்நாட்டில் இதுவரை அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய பேருந்து நிலையம் மட்டுமல்லாமல் முழுமையான குளிர்சாதன வசதி கொண்ட முதலாவது பேருந்து நிலையம் என்ற பெருமையையும் கொண்டுள்ளது.
இந்த பேருந்து முனையத்தில் 20 எண்ணிக்கையில் தேநீர் கடைகளும், 12 உணவகங்கள், 10 சிற்றுண்டி கடைகள், காத்திருப்பு மண்டபங்கள், 173 சிறுநீர் கழிவறைகள் மற்றும் 21 குளியல் அறைகள் உள்ளன. பேருந்து முனையத்தை ஒவ்வொரு மணி நேரமும் சுத்தம் செய்து தூய்மையாக பராமரிக்க 228 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பயணிகள் மற்றும் அவர்களுடைய உடமைகளின் பாதுகாப்புக்கு காவல்துறையினர் 52 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
ஆட்டோ, டாக்ஸி மற்றும் ஈ டாக்ஸி சேவைகள் வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. பயணிகளுக்கு உதவ தன்னார்வலர்கள் 30 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சிரமப்படும் முதியவர்கள் மற்றும் நோயாளிகள் பயன்பாட்டுக்காக மூன்று பேட்டரி வாகனங்கள் தயார் நிலையில் உள்ளது.
மருத்துவக் குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர். இதனைத் தவிர வர்த்தக வளாகங்கள், அலுவலகங்கள் மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் என்பவற்றுடன் கூடிய வடிவமைப்புக்கான ஆய்வுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மற்ற மாநிலங்களும் வியக்கும் வகையில் தமிழ்நாடு தற்போது சிறந்து விளங்குவது இதன் மூலம் தெரிகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



