டிரம்புடன் கைகோர்த்து காசா அமைதி வாரியத்தில் இணைவதாக UAE அறிவிப்பு!

top-news
FREE WEBSITE AD

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் காசாவின் அமைதி வாரியத்தை இந்தியா, ரஷ்யா உள்பட பல்வேறு நாடுகளும் ஏற்க தயங்கும் நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் அதனை ஏற்பதாக அறிவித்துள்ளது.

பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் போர் புரிந்து வந்தது. காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினரை அழிக்கும் வகையில் இஸ்ரேல் இந்த தாக்குதலை தொடங்கியது. 2023 அக்டோபர் 7 ம் தேதி தொடங்கிய இந்த போர் 2 ஆண்டுகளை கடந்தும் நடந்தது. காசாவில் ஏராளாமானவர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.

இந்த போர் கடந்த ஆண்டு நிறுத்தப்பட்டது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலையீடு செய்து போரை நிறுத்தினார். கடந்த அக்டோபர் மாதத்துடன் போர் முடிவுக்கு வந்தது. இஸ்ரேல் மற்றும் காசா இடையே அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.இந்த அமைதி ஒப்பந்தத்தின் அடுத்தக்கட்டமாக டொனால்ட் டிரம்ப், காசா அமைதி வாரியம் அமைப்பதாக அறிவித்துள்ளார்.

இந்த வாரியம் காசா உள்பட பிற பிரச்சனைகளை தீர்க்கும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த வாரியம் புதிய சர்வதேச அமைப்பாக இருக்கும். இந்த வாரியத்தில் இணைய இந்தியப்பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உள்பட உலக தலைவர்களுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.

அதேபோல் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் அழைத்து விடுக்கப்பட்டது. இந்நிலையில் தான் டிரம்பின் காசா அமைதி வாரியத்தில் இணைவதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது. ஐரோப்பா உள்பட பல நாடுகளும் இந்த வாரியத்தை ஏற்கவில்லை. ஆனால் ஐக்கிய அரபு அமீரகம் உடனடியாக ஏற்றுக்கொண்டுள்ளது. இதனை அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

இதுபற்றி அந்த அமைச்சகம் சார்பில், ''அனைவருக்கும் ஒத்துழைப்பு, ஸ்திரத்தன்மை, செழிப்பிற்காக காசாவின் அமைதி வாரியத்தை ஏற்று அதில் பங்களிப்பு செய்ய தயாராக இருக்கிறோம்'' என்று அந்தத் துறையின் அமைச்சர் கூறியுள்ளார்.

அதேபோல் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, கனடா பிரதமர் மார்க் கார்னி உள்ளிட்டவர்கள் டிரம்பின் அழைப்பை ஏற்றுள்ளனர். அதேபோல் ஹங்கேரி நாட்டின் தலைவரும் ஆதரவு தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்தியா இந்த விஷயத்தில் டிரம்பின் அழைப்பை இன்னும் ஏற்கவில்லை. பரிசீலனையில் வைத்துள்ளது.

இந்த வாரியத்தின் வாழ்நாள் தலைவராக டொனால்ட் டிரம்ப் செயல்படுவார். உறுப்பு நாடுகள் 3 ஆண்டு காலத்துக்கு மட்டுமே அங்கம் வகிக்க முடியும். ஒருவேளை நிரந்தர உறுப்பினர் அந்தஸ்தை பெற வேண்டும் என்றால் குறிப்பிட்ட அந்த நாடு 1 பில்லியன் டாலர் வரை செலுத்த வேண்டும். இதனால் பல நாடுகளும் தயங்குகின்றன.

அதுமட்டுமின்றி இந்த வாரியத்தில் உள்ள சாரம்சம் என்பது ஐநாவின் பணிகளை பாதிக்கும் வகையில் உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே டொனால்ட் டிரம்ப், ஐநாவை எதிர்த்து வரும் நிலையில் அவரது இந்த நடவடிக்கையை ஐரோப்பிய நாடுகள் ஏற்க தயங்குகின்றன. இப்படியான சூழலில் தான் ஐக்கிய அரபு அமீரகம், டிரம்பின் அழைப்பை ஏற்பதாக அறிவித்துள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *