என் பிள்ளைகள் ஊழல்வாதிகள் என்றால் அன்வாரின் பிள்ளைகள்? அன்வாருக்கு மகாதீர் பதிலடி!
- Thinagaren Sanggaren
- 11 Aug, 2025
ஆகஸ்ட் 11,
அன்வார் மகா பொய்க்காரர் என ஒவ்வொரு நாளும் நிரூபித்து வருவதாக முன்னாள் பிரதமர் மகாதீர் சாடினார். என் பிள்ளைகள் அரசாங்கத்தின் சொத்துகளைக் கையகப்படுத்தி சொத்துகளைக் குவித்திருந்தால் அந்த சொத்துகளை மீண்டும் அரசாங்கத்திடம் திருப்பி தர வேண்டும் என அன்வார் இந்தோனேசியாவில் ஒரு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார். இதைத் தான் லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமும் கடந்த ஜனவரியில் என் மீதும் என் பிள்ளைகள் மீதும் குற்றம்சாட்டி விசாரணையை நடத்தியது. அப்படியானால் லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் அன்வாரின் அறிவுருத்தலால் என் மீதும் என் பிள்ளைகள் மீதும் விசாரணையை மேற்கொண்டதா எனும் கேள்வியை மகாதீர் முன்வைத்துள்ளார்.
நான் பிரதமராக இருந்த போது என் பிள்ளைகள் அரசு சொத்துகளைக் கையகப்படுத்தியதாக எந்தவோர் ஆதாரமுமில்லை. இப்போது பிரதமராக இருக்கும் அன்வார் அவரின் பிள்ளைகள் வைத்திருக்கும் சொத்துகளுக்குக் கணக்கு காட்டுவாரா? அன்வாரின் பிள்ளைகள் கொண்டிருக்கும் சொத்துகள் அவர்கள் சம்பாதித்தது என்றால், 20 ஆண்டுகளுக்கும் மேலாக என் பிள்ளைகள் தொழிலதிபர்களாக இருக்கிறார்கள். அப்படியானால் 20 ஆண்டுகளில் அவர்கள் வணிகத்தில் சம்பாதித்ததை அரசாங்கத்தின் சொத்துகளைக் கையகப்படுத்தி சம்பாதித்ததாக அன்வார் எப்படி கூற முடியும் என மகாதீர் கேள்வி எழுப்பினார்.
அன்வார் ஓர் அற்புதமான திறமையான பொய்க்காரர். தேர்தலுக்கு முன்னரும் சரி தேர்தலுக்குப் பின்னரும் சரி. அவரின் பொய்கள் மலை போல குவிக்கும் அளவிற்கு உள்ளது என மகாதீர் கடுமையாகச் சாடினார். என் சொத்துகள் குறித்தும் என் பிள்ளைகளின் சொத்துகள் குறித்தும் லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் பல மாதங்களாக விசாரணையை நடத்தியது. விசாரணையின் முடிவில் அதன் தலைமை இயக்குநர் தான் ஸ்ரீ அசாம் பாக்கி முறைகேடாக எந்தவொரு சொத்துகளும் குவிக்கவில்லை என விசாரணை அறிக்கையையும் வெளியிட்டார். அப்படியிருக்க அன்வார் மீண்டும் என் மீதும் என் பிள்ளைகள் மீதும் முகாந்தாரம் இல்லாத குற்றச்சாட்டுகளைப் பொது மேடைகளிலும் வெளிநாடுகளிலும் பேசி வருவது கண்டிக்கத்தக்கது என மகாதீர் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



