வெள்ளப் பேரிடரில் அரசு முழு அர்ப்பணிப்புடன் செயல்படும் - பிரதமர் உறுதி
- Tamil Malar (Reporter)
- 25 Nov, 2025
செய்தி - வெற்றி மைந்தன்
கோலா லும்பூர், நவ. 25-
மலேசியாவில் தொடரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பேரிடர் மேலும் தீவிரமடைந்து, ஏழு மாநிலங்களில் 15,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அதிகாரப்பூர்வ பயணமாக கென்யாவில் இருக்கும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம், வெள்ள நிலைமையை ஒவ்வொரு நிமிடமும் கண்காணித்து வருவதாகவும், அரசு முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாகவும் உறுதியளித்தார்.
இன்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்ட அவர், “நட்மா உட்பட அனைத்து அமைப்புகளும் முழுமையாக களத்தில் இறக்கப்பட்டுள்ளன. இன்னும் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்பதற்கும், அவசர உதவிகளை உடனடியாக வழங்குவதற்கும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
மேலும், “மலேசிய சிறப்பு தேடுதல் , மீட்புக் குழு (SMART) கிளந்தானில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களுக்கும் தேவைப்படின் உடனடியாக செல்ல தயார் நிலையில் உள்ளது” என்று குறிப்பிட்டார்.
கிளந்தான், திரெங்கானு, பேராக், கெடா உள்ளிட்ட மாநிலங்களில் வெள்ள நீர் உயர்ந்து வருவதால் ஆயிரக்கணக்கானோர் நிவாரண முகாம்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். பிரதமரின் உத்தரவாதத்தால் மீட்புப் பணிகள் வேகமெடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



