மடியில் பெண்ணுடன் பேருந்து ஓட்டியவருக்கு ஓராண்டு சிறை! பெண்ணுக்கு 6 மாதங்கள் சிறை!
- Shan Siva
- 17 Apr, 2026
கோலாலம்பூர், ஏப் 17: மடியில் பெண்ணை அமர வைத்து விரைவுப்பேருந்தை ஓட்டிய சம்பவம் சர்ச்சை ஆன நிலையில், அதி சம்பந்தப்பட்ட ஆணும், பெண்ணும் ஜாசின் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டிய குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
இந்நிலையில், 36 வயதான ஆரிஃப் ஃபஹ்மி அப்துல் சலாம் என்ற அவ்வாடவருக்கு
ஓராண்டு சிறைத் தண்டனையும், 21 வயதான நூர் அடிலா நஜ்வா
இல்ஹாம் அமீருல்லா என்ற பெண்ணுக்கு ஆறு மாத சிறைத் தண்டனையும் விதித்து மாஜிஸ்திரேட்
மசானன் சினின் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா RM5,000 அபராதம் விதிக்கப்பட்டதுடன், ஐந்து ஆண்டுகளுக்கு ஓட்டுநர் உரிமம்
வைத்திருக்கவும் தடை விதிக்கப்பட்டது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு
சுமார் 7.30 மணியளவில், வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் தெற்கு நோக்கிய
பாதையில் உள்ள பெம்பன் ஓய்வு நிறுத்தத்தின் வெளியேறும் வழியில், விரைவுப் பேருந்தை அஜாக்கிரதையாகவும்
அபாயகரமாகவும் ஓட்டியதாக அவர்கள் இருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.
சாலைப் போக்குவரத்துச்
சட்டத்தின் பிரிவு 42(1)-இன் கீழ் இந்தக்
குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இப்பிரிவின்படி, குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, RM5,000 முதல் RM15,000 வரை அபராதம் மற்றும் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு
ஓட்டுநர் உரிமம் பெறுவதிலிருந்து தகுதியிழப்பு ஆகியவை விதிக்கப்படும்.
44 வயதுப் பெண்ணிடம் தகாத
வார்த்தைகளைப் பயன்படுத்தி அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டதற்காகவும் அடிலா மீது
குற்றம் சாட்டப்பட்டது. சிறு குற்றங்கள் சட்டத்தின் பிரிவு 14-இன் கீழ் உள்ள இந்தக் குற்றச்சாட்டுக்கு
அதிகபட்சமாக RM100 அபராதம்
விதிக்கப்படலாம்.
அதே நாளில் மாலை சுமார் 6
மணியளவில் பேருந்தில் இந்தக் குற்றத்தைச்
செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



