ஜப்பான் நாட்டு பிரதமர் ராஜினாமா!
- Muthu Kumar
- 08 Sep, 2025
ஜப்பான் நாட்டின் பிரதமர் ஷிகேரு இஷிபா(68) ராஜினாமா செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஜப்பானில் ஆளுங்கட்சியாக உள்ள 'லிபரல் டெமோக்ரடிக் பார்ட்டி(எல்.டி.பி.)' கட்சிக்குள் உள்கட்சி பூசல் பூதகரமாக வெடித்துள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, உள்ளாட்சி தேர்தல்களிலும் ஷிகேரு தலைமையிலான ஆளுங்கட்சி தொடர் தோல்விகளைச் சந்தித்து வருகிறது. இந்த அசாதாரண அரசியல் சூழலில், தமது பதவியை ராஜினாமா செய்வதாக அதிரடியாக அறிவித்துள்ளார் இஷிபா ஷிகேரு.
கடந்தாண்டு அக்டோபரில் ஜப்பான் பிரதமராக பதவியேற்றுக்கொண்ட அவர், கட்சியில் ஏற்பட்டுள்ள தொடர் அழுத்தம் காரணமாகவே இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தொடர் அழுத்தம் இருந்தாலும், அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைகள், அதனால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல், ஜப்பான் பிராந்தியத்தை சுற்றியிருக்கும் சவால்கள், விலைவாசி உயர்வு ஆகிய பல காரணங்களால் தமது அரசு கடமையை தொடர்ந்து வந்த ஷிகேரு, ஞயிற்றுக்கிழமை(செப். 7) இந்த முடிவை எடுத்துள்ளார்.
அவரது தலைமையிலான ஜப்பானிய அரசு, அமெரிக்காவுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பயனாக டிரம்ப் விதித்திருந்த 25 சதவீத வரி விகிதம் இறுதியாக 15 சதவீதமாக குறைக்கப்பட்டு இவ்விரு நட்பு நாடுகளுக்கும் இடையில் ஒப்பந்தம் எட்டப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
மறுபுறம், திங்கள்கிழமை ஜப்பான் நாடாளுமன்றத்தில் அவருக்கெதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர திட்டமிடப்பட்டிருந்ததும் அவரது பதவி விலகலுக்கான முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. தேர்தல்களில் ஏற்பட்ட தொடர் தோல்விகளால் நாடாளுமன்ற இரு அவைகளிலும் பெரும்பான்மை பலத்தை விட குறைவான உறுப்பினர்களைக் கொண்டுள்ள எல்.டி.பி. அதன் கூட்டணிக் கட்சிகள் பலத்துடன் ஆட்சியை தக்கவைத்துள்ளது.
இந்த நிலையில், பதவி விலகல் குறித்து ஷிகேரு இஷிபா வெளியிட்டுள்ள பொது அறிக்கையில், "நான் வகித்துவரும் லிபரல் டெமோக்ரடிக் கட்சி தலைமைப் பதவியிலிருந்து விலகிக்கொள்ள தீர்மானித்துள்ளேன். கட்சி பொதுச்செயலாளரிடம் இது குறித்து அறிவித்துவிட்டதுடன், அடுத்தகட்டமாக தலைவர் பதவிக்கான தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், ஜப்பான் நாடாளுமன்ற கீழவையில் பலம் வாய்ந்த கட்சியாக திகழும் எல்.டி.பி.யிலிருந்து அடுத்த பிரதமர் தேர்வாவதும் உறுதியாகியுள்ளது. அடுத்த பிரதமருக்கான போட்டியில் அக்கட்சியின் முக்கிய தலைவர்களான சநே டகாய்ச்சி, ஷிஞ்ஜிரோ கோய்ஸுமி, டகாயூகி கோபாயாஷி, யோஷிமாசா ஹயாஷி ஆகியோரிடையே கடும் போட்டி உருவாகியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



