தனியார் தரவுகளுக்குப் பாதுகாப்பு உறுதி – பல்லூடக அமைச்சர்
- Tamil Malar (Reporter)
- 18 Nov, 2025
செய்தி-வெற்றி மைந்தன்
கோலாலம்பூர், நவ. 18-
MyDigital ID அடையாள அங்கீகாரத்தைப் பயன்படுத்தும் MyGOV மலேசியா பயன்பாடு அனைத்துலக தரத்தில் பாதுகாப்பு அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், குடிமக்களின் தனிப்பட்ட தரவுகளை நகலெடுக்கவோ சேமிக்கவோ செய்யாது என்றும் பல்லூடக அமைச்சர் கோபிந்த் சிங் தியோ உறுதியளித்தார்.
பாராளுமன்ற வாய்மொழி கேள்வி நேரத்தில் பேசிய அவர், இந்த அமைப்பில் இணைக்கப்படும் ஒவ்வொரு சேவையும் முதலில் பாதுகாப்பு சோதனையும் தரவுப் பாதுகாப்பு தரநிலைக்கு இணங்கிய சோதனையும் மேற்கொள்ளப்பட வேண்டும். மக்கள் பயன்பாட்டுக்கு வெளியிடுவதற்கு முன்பு ஆபத்து மதிப்பீடு, முழு அமைப்பு ஆடிட் நடத்தப்படுகிறது என்றார்.
MyGOV Malaysia தளம் தனிப்பட்ட தரவுகளை ஒருபோதும் சேமிப்பதில்லை. அனைத்து ஒருங்கிணைப்புகளும் ஏ.பி.ஐ (Application Programming Interface) மூலமே நடைபெறுகின்றன. எனவே குடிமக்களின் தரவுகள் தொடர்புடைய அரசு நிறுவனங்களின் பாதுகாப்பான அமைப்புகளிலேயே தங்கியிருக்கும் என்று அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
தேசிய டிஜிட்டல் அடையாள முறைமையான MyDigital ID-ஐப் பயன்படுத்தி அரசு சேவைகளை ஒரே இடத்தில் பெறுவதற்காக MyGOV பயன்பாடு உருவாக்கப்பட்டுள்ளது. தரவு திருட்டு, தவறாகப் பயன்படுத்துதல் போன்ற அச்சங்கள் காரணமாக சிலர் இதனைப் பயன்படுத்த தயங்குவதற்கு இந்த உறுதிமொழி பதிலளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



