நாய்கள் கொல்லப்பட்டதற்காக யூபிஎம் மன்னிப்பு கோரியது!
- Muthu Kumar
- 15 Oct, 2025
கோலாலம்பூர், அக். 15-
தனது வளாகத்திற்குள் ஆதரவற்ற நாய்கள் கொல்லப்பட்டது தொடர்பில், மலேசிய புத்ரா பல்கலைக் கழகம் (யூபிஎம்) மன்னிப்புக் கோரியுள்ளது.அதோடு, இச்சம்பவம் தொடர்பிலான விசாரணை முடிவடையும் வரையில், யூபிஎம்மின் வேலையிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிர்வாக அலுவலகத்தின் இயக்குநர் “இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றும் அது தெரிவித்தது.
நாய்கள் கொல்லப்பட்ட விவகாரத்தை தான் ஒரு கடுமையான செயலாகக் கருதுவதாகவும் இதன் தொடர்பிலான விசாரணை முழுமையிலும் சம்பந்தப்பட்ட அதிகாரத் தரப்பினருக்கு தான் முழு ஒத்துழைப்பை வழங்கப் போவதாகவும், நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் யூபிஎம் கூறியது.
"பல்கலைக் கழகம் தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறது. கடந்த 2024ஆம் ஆண்டு இறுதியில் நடந்ததாகக் கூறப்படும் ஆதரவற்ற நாய்களைக் கையாளும் நிர்வாகத் தரப்பினர் சம்பந்தப்பட்ட சம்பவத்திற்காக பல்கலைக் கழகம் மனதார மன்னிப்பை கோருகிறது என்று அவ்வறிக்கையில் யூபிஎம் குறிப்பிட்டது.
கடந்த 2024ஆம் ஆண்டு இறுதி மற்றும் 2025ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு வெவ்வேறு நடவடிக்கைகளில், யூபிஎம் வளாகத்திற்குள் 18 நாய்களும் 5 நாய்க் குட்டிகளும் கொல்லப்பட்டதாகக் கூறப்படுவது தொடர்பில், பெக்கா எனப்படும் பாரம்பரிய இயற்கை பாதுகாப்பு அமைப்பு கடந்த வாரத்தில் போலீசில் புகார் ஒன்றை செய்திருந்தது.எனினும், இவ்வாண்டில் புரியப்பட்டதாகக் கூறப்படும் அத்தகைய செயல் குறித்து யூபிஎம் நேற்று எதுவும் தெரிவிக்கவில்லை.
தனது வளாகத்திற்குள் சுற்றித் திரிந்த நாய்களை கொல்வதற்காக அப்பல்கலைக் கழகம் ஒரு நிறுவனத்தை பணியில் அமர்த்தி இருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து போலீசார் கடந்த வாரத்தில் விசாரணையை முடுக்கி விட்டிருந்தனர்.
கால்நடை அதிகாரத் தரப்பினரின் அனுமதியின்றி விலங்குகளை சுட்டுக் கொல்ல தடை விதிக்கும். 2015ஆம் ஆண்டு விலங்குகள் நலச் சட்டத்தின் செக்ஷன் 301இன் கீழ் அச்சம்பவம் விசாரணை செய்யப்பட்டு வருவதாக, செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஃபாரிட் அஹ்மாட் தெரிவித்தார்.
நாய்களை கொல்வதற்காக நியமிக்கப்பட்ட குத்தகையாளரின் இரண்டு நடவடிக்கைகள் தொடர்பிலான ஆவணங்களை, யூபிஎம்மின் வேலையிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிர்வாக அலுவலகத்தின் ஊழியர் ஒருவர் படித்து விட்டு கையொப்பம் இட்ட ஆதாரத்தை பெக்கா போலீசாரிடம் ஒப்படைத்திருக்கிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



