பாஸ் எம்.பி.யின் கேலிச் சித்திரம்: அமானா போலீசில் புகார்!

top-news
FREE WEBSITE AD

ஷாஆலம், ஜூலை 31-

பாஸ் தகவல் பிரிவின் தலைவர் அமாட் ஃபாட்லி ஷாரி சமூக ஊடகமொன்றில் வெளியிட்டுள்ள பதிவுக்கு எதிராக அமானா கட்சி போலீசில் புகார் செய்துள்ளது. அக்கேலிச் சித்திரம் மலேசியாவின் அரசதந்திர உறவுகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதோடு தீவிரவாதத்தையும் தூண்டிவிடச் செய்யும் என்று அப்புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்கேலிச் சித்திரம் மலேசியாவின் வட்டாரப் பங்காளி நாடுகளை அவமதிப்பதாக உள்ளது. பிரதமர் அன்வார் இப்ராஹிமின் பங்களிப்பையும் ஆசியானின் நடப்புத் தலைவர் எனும் வகையில் மலேசியாவின் நிலையையும் அது கீழறுக்கிறது என்று அமானா கட்சியின் ஒருங்கிணைப்புப் பிரிவின் இயக்குநர் அபாஸ் அஸ்மி எச்சரித்தார்.

"தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே அண்மையில் போர்நிறுத்தம் ஏற்பட்டதற்கு மலேசியா முக்கிய பங்காற்றியது. அதன் பிறகுதான் அந்த கேலிச்சித்திரப் பதிவை பாஸ் வெளியிட்டுள்ளது. ஒரு நல்ல செயலுக்கு நாம் அளிக்கும் சன்மானமா இது?" என்று ஷாஆலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது அபாஸ் வினவினார்.

இந்த விவகாரம் தொடர்பில் போலீஸ் புகார் செய்ய வேண்டியது அவசியம். 1948ஆம் ஆண்டு தேசிய நிந்தனைக் சட்டம், 1998ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் ஆகியவற்றின்கீழ் நடவடிக்கை மேற்கொள்ளும்படி வலியுறுத்துகிறோம்" என்றார் அவர்.

வாழைப் பழங்களுக்காக ஓர் ஆடும் செம்மறியும் சண்டையிடுவதையும் அச்சண்டையைத் தீர்த்து வைக்க ஒரு குரங்கு மத்தியஸ்தராக செயல்படுவதையும் காட்டும் விதத்தில் அந்தக் கேலிச் சித்திரம் அமைந்துள்ளது.

தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் போர் நிறுத்தம் ஏற்படுவதற்கு எடுக்கப்படும் முயற்சியை எள்ளி நகையாடுவது போல் உள்ளது என்று பல தரப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.அவ்விரு அண்டை நாடுகளுக்கும் இடையே ஐந்து நாட்களாக நடைபெற்று வந்த மோதல் திங்கள்கிழமை நன்ளிரவில் நடப்புக்கு வந்த போர்நிறுத்த ஒப்பந்தத்துடன் முடிவடைந்தது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *