நகராண்மைக் கழகத்தின் ஆண்டு நிறைவையொட்டி வாகன நிறுத்துமிடக் கட்டணம் வசூலிக்கப்படாது!
- Muthu Kumar
- 06 Sep, 2025
(எஸ்.எஸ்.மணிமாறன்)
பந்திங், செப்.6-
வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி கோலலங்காட் நகராண்மைக்கழகம் அதன் நகர அந்தஸ்தைப் பெற்று 5 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி அன்றைய தினத்தில் மட்டும் மாவட்ட ரீதியில் இருக்கும் வாகன நிறுத்தும் இடங்களில் கட்டணம் வசூலிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட மன்றமாக இருந்து நகராண்மைக்கழகமாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் அன்றைய தினத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளதாக அதன் தலைவர் துவான் முகமட் ஹஸ்ரி நோர் முகமட் தெரிவித்தார்.
அதே நாளில் நண்பகல் 12 மணியளவில் தெலுக் பங்லிமா காராங், பந்திங், கஞ்சோங் டாராட், ஒலாக் லெம்பிட் மற்றும் தஞ்சோங் சிப்பாட் ஆகிய குறிப்பிட்ட பெட்ரோல் நிலையங்களில் முதலில் வரும் 100 மோட்டார் சைக்கிளோட்டிகள் 5 ரிங்கிட்டுக்கு இலவச பெட்ரோலை மோட்டார் சைக்கிள்களில் நிரப்பிக் கொள்ளலாம் என்று அவர் கூறினார்.
அதே வேளையில், வாகன நிறுத்தும் இடங்களில் ஏற்கெனவே சம்மன் பெற்றவர்கள் செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் செப்டம்பர் 19 ஆம் தேதி வரை நேரில் வந்து முகப்பிடங்களில் அதற்கான அபராதத் தொகை செலுத்தும்போது 10 ரிங்கிட் கழிவு வழங்கப்படும் என்று முகமட் ஹஸ்ரி தெரிவித்தார்.
வீட்டுவரிக்கான (சுக்காய் பிந்து)கட்டணத்தை நாள் கடந்து தாமதமாக செலுத்த வருவோருக்கு அதற்கான அபராதத்தொகை வசூலிக்கப்பட மாட்டாது. இலவச மருத்துவ முகாம், குடியிருப்பாளர்களுக்கான அக்ரோ மடானி பதிவுத்திட்டம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளும் அன்றைய தினம் நகராண்மைக் கழக வளாகத்தில் நடைபெறும் என்று அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



